உரம் தேவையில்லை; பூச்சிமருந்து தேவையில்லை; பயிர் செய்தால் லாபம் செம்மயா இருக்கும்…
உரம் தேவையில்லை; பூச்சிமருந்து தேவையில்லை; பயிர் செய்தால் லாபம் செம்மயா இருக்கும். அப்படி ஒரு அற்புத செடிதான் “வெட்டிவேர்”
வெட்டிவேர்:
புல் இனத்தைச் சேர்ந்தது “வெட்டிவேர்”. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.
வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் “வெட்டிவேர்” என வழங்கப்படுகிறது.
இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு.
வெட்டிவேரை பயிர்செய்வது எப்படி?
1.. இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம்.
2.. மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
3.. இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர்.
4.. செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
5.. ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக் கொள்ளலாம்.
6.. ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.
7.. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.
8.. வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம். அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது.
9.. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.
10.. மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு 13-ஆம் மாதத்தில் அறுவடைதான்.
வெட்டிவேரின் பயன்கள்:
1.. வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும்.
2.. மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
3.. நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள்.
4.. வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
5.. இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள். வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள்.
6.. இது உடலின் வேர்வையும், சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.