நீங்களும் செய்யலாம் இயற்கை வேளாண்மையில் செடி முருங்கை சாகுபடி…
இயற்கை வேளாண்மை முறையை மேற்கொள்ளுவதால் செடிமுருங்கைய்யின் பாரம்பரிய குணாதிசயங்கள் எதுவும் மாறாமல் காக்கப்படுகிறது.
இயற்கை முறை பராமரிப்பு என்பதால் நோய் தாக்குதலும் இருக்காது.
முருங்கை கன்றுகளுக்கு, நன்கு பராமரிக்கப்பட்டு தாய்குணம் உள்ள, அதிக காய்பிடிப்பு தன்மையுள்ள மரத்தில் விண்பதியம் மூலம் நாற்றுகள் உருவாக்கப்படுகிறது.
இந்த முறையில் உண்டான கன்றுகள் நடவு செய்த 6-7 மாதத்திலேயே காய்த்து பலன் தரத் தொடங்கிவிடுகிறது.
காய்க்கத் தொடங்கிய முதலாண்டு இறுதிக்குள் ஒரு மரமானது குறைந்தது 50 கிலோ காய்கள் வரை கொடுத்துவிடுகிறது.
இரண்டாம் ஆண்டில் 3 காய்க்கும் பருவமும் சேர்த்து ஒரு மரம் 200 கிலோவிலிருந்து 250 கிலோ வரையிலும் காய்கள் பெறலாம்.
சரியான பராமரிப்பு, அதாவது இயற்கை முறையில் எரு, மண்புழு உரம், இயற்கை நோய் கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்தியவர்கள் ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 300 கிலோ காய்கள் வரை மகசூல் எடுத்துள்ளனர்.
ஒரு ஆண்டு காலம் மகசூல் தந்த மரங்களை தரையிலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் ஒரே மட்டமாக கவாத்து செய்தபின், வெட்டிய பகுதியில் போர்டோ கலவையை பூசி பூஞ்சாண நோய் வருவதைத் தவிர்க்கலாம். 100 கிராம் மயில் துத்தத்தையும் 100 கிராம் சுண்ணாம்பு கரைசலில் கலந்தவாறு ஊற்றி போர்டோ கலவை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு கவாத்து செய்தபின் தண்டுப் பகுதியிலிருந்து கிளைகள் வளரத் தொடங்கும். பக்கவாதுகளில் நல்ல திடமான கிளைகள் 5 முதல் 7 மட்டும் விட்டுவைக்க வேண்டும்.
இப்படித் தோன்றும் கிளைகள் வளர்ந்து ஆறாம் மாதத்தில் பூக்கத் தொடங்கும்.
மீண்டும் எட்டாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரையில் காய்கள் கிடைக்கும்.
அறுவடை முடிந்தபின் செடிகளை அடியுடன் அப்புறப்படுத்திவிட்டு மறுநடவு செய்யலாம்.
மொத்தத்தில் செடி முருங்கை மூன்று ஆண்டுகள் வரை பலனளிக்கும்.
ஒவ்வொரு முறை கவாத்து செய்தபிறகு பரிந்துரை செய்யப்பட்டு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
இச்செடி முருங்கையை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் 2500-3000 ரூபாய் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கரிலிருந்து ஆண்டொன்றிற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.