கொப்பரைத் தேங்காய் வியாபாரம் செய்தால் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு லாபம் பார்க்கலாம்...
தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும்.
காய வைத்த தேங்காய் பருப்புதான் கொப்பரை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. எனவே கொப்பரை தயாரிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொப்பரை தயாரிப்பில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை மற்றும் குளிர் நிலவுவது, கொப்பரை உற்பத்திக்கு பாதகம். மற்ற மாவட்டங்களில் தென்னை சாகுபடி குறைவாக இருந்தாலும், கொப்பரை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அங்கு உள்ளவர்கள் இப்பகுதியில் தேங்காய் வாங்கி கொப்பரை தயாரிப்பில் ஈடு பட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம்.
தேங்காய் விலை ஏற்ற, இறக்கம்உள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய செலவு ஒரு தேங்காய் விலையோடு, கூடுதலாக ரூ.2 ஆகும். தேங்காய் விலையை பொருத்து உற்பத்தி செலவை கணக்கிடலாம்.உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அளவை பொருத்து கொப்பரையின் விலை இருக்கும். விலை குறையும் போது இருப்பு வைத்து, ஏறும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
அதே போல் கொப்பரை விலை ஏறினால், தேங்காய் விலை ஏறுகிறது. கொப்பரை விலை குறையும் போது தேங்காய் விலையும் குறைகிறது. கொப்பரை விலை குறையும்போது தேங்காய்களை வாங்கி போட்டால், கொப்பரை உற்பத்தி செலவு குறையும்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் கிராம கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவ்வப்போது கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து, தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரைகளை கொள்முதல் செய்கிறார்கள். அங்கு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதில்லை.
நிர்ணயிக்கப்படும் விலை குறைவாக உள்ளது. ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, கிலோவுக்கு ரூ.60ஐ உடனடியாக கொடுத்தால் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கட்டமைப்பு வசதி!
மரத்தில் இருந்து பறித்து வரும் தேங்காய்களை சேமித்து வைக்கவும், உரிக்கவும், மட்டை, ஓடுகளை தேக்கி வைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடம். கொப்பரை காய வைக்க தேவையான களம் அமைக்க 25 சென்ட் இடம். தேங்காய் மட்டும் வாங்கி கொப்பரை தயாரிக்க, களத்துக்கான இடம் மட்டும் போதுமானது.
களத்தில் படும் வெயிலின் சூட்டை தக்க வைக்க தரையில் கடப்பா கல் பதிக்க வேண்டும். கடப்பா கல் பதித்தால் தான் அதன் மேல் பரப்பப்படும் கொப்பரை விரைவில் காயும். இவ்வாறு களம் அமைக்க ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.
உற்பத்தி செலவு!
ஆயிரம் தேங்காய்களில் அதிகபட்சம் 150 கிலோ கொப்பரை கிடைக்கும். ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ.60 முதல் அதிகபட்சம் ரூ.70 வரை செலவாகிறது. மாதம் 900 கிலோ உற்பத்தி செய்யலாம். உற்பத்தி செலவுக்கு குறைந்தபட்சம் ரூ.45 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.54 ஆயிரம் தேவை.
வருவாய்
கொப்பரை விலை கிலோ ரூ.65 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோவுக்கு லாபம் ரூ.10 முதல் ரூ.25 வரை கிடைக்கும். கொப்பரை விற்பனை மூலம் மாத லாபம் ரூ.5500 முதல் ரூ.15500 கிடைக்கும். இது தவிர தேங்காய் உரித்த மட்டைகள், ஓடுகளையும் விற்கலாம்.
ஆயிரம் கிலோ கொப்பரை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் 8 ஆயிரம் மட்டை மற்றும் ஓடுகள் மூலம் ரூ.16 ஆயிரம் வருவாய் கிடைக்கும். கொப்பரை உற்பத்தியில் மாத மொத்த லாபம் ரூ.17500 முதல் ரூ.28500 வரை கிடைக்கும்.