Asianet News TamilAsianet News Tamil

காலியாக உள்ள இடங்களில் என்ன காய் வளர்க்கலாம்?

what vegetable-can-be-grown-in-the-empty-seats
Author
First Published Jan 3, 2017, 12:18 PM IST


வீட்டுத் தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் காய்கறி வளர்ப்பது நமக்கு காய் வாங்கும் செலவை மிச்சப்படுத்தும்.

இரசாயன கலப்பில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து உண்பதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வீட்டுத் தோட்டத்தில் தக்காளி சாகுபடி செய்வது எளிதானது.

சரியான பருவத்தில் பயிரிட்டால் தரமான தக்காளியை அறுவடை செய்யலாம்.

தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக்காலத்திலும் இல்லாமல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் கார தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

தோட்டத்தில் உள்ள மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும். தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.

விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம். விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்த்து விடலாம். வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.

சரியான ஈரப்பதத்தில் தோட்டத்தை உழவு செய்யவேண்டும். 3 அல்லது 4 முறை உழவு செய்து 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும். பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம். நடவுக்கு முன் தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.

60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும். நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

இலைச்சுருட்டு நச்சுயிரி நோய் தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். இலைப்பேன் தாக்குதல் தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும். வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும். பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் தெளிக்கவும். பூச்சி தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும். புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றி இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் நிச்சயம் மகசூல் கிடைக்கும் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios