விவசாயத்தில் முழு பலனை அனுபவிக்க “வெர்மிகுலைட்டை” பயன்படுத்துங்க…
“ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானதுதான் இயற்கை விவசாயம்.
கால்நடைக் கழிவுகள் உரமாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகின்றன.
மண்புழுக் கழிவு, மண்புழு உரமாகிறது.
இப்படி, பல கழிவுகள் மிகச் சிறந்த உரமாகவும், பயிர்களுக்கான வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றன.
அந்த வகையில், இயற்கையில் சில கனிமங்கள் சிதைவுறும்போது உருவாகும் வெர்மிகுலைட் என்ற கனிமம், இயற்கை வேளாண்மையில் சிறந்த ஊடகமாக செயல்பட்டு தண்ணீரைச் சேமித்து வைத்து பயிர்களுக்கு கொடுக்க உதவியாக இருக்கிறது.
உரங்கள், வளர்ச்சி ஊக்கிகள், நுண்ணூட்டச் சத்துக்கள் ஆகியவற்றை பயிர்கள் முழுமையாக எடுத்துக்கொள்ள உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து அதை இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்.
மாடியில் தோட்டம் போட்டால், செடிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் வழிந்து மாடியெங்கும் பரவும், வெயிலில் இருந்து செடிகளைப் பாதுகாப்பது கடினமானது என்ற அச்சம் காரணமாக பெரும்பாலானவர்கள் ‘மாடித் தோட்டம் அமைக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தும் , அதைச் செயல்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது வெர்மிகுலைட். இதை செடிகள் உள்ள பைகளில் இடும்போது, தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. எனவே, தொட்டியை விட்டோ, பையை விட்டோ தண்ணீர் வீணாக வெளியே வராது.
வெர்மிகுலைட் பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊடகமாகச் செயல்படுகிறது. இதைப் பயிர்களுக்கு இடுவதற்கு வசதியாக துகள்களாகக் கொடுக்கலாம். இந்தத் துகள்களை மண்ணில் இடும்போது, மண்ணில் காற்றோட்டம் கிடைக்க உதவிசெய்து, செடிகளின் வேர்கள் எளிதில் ஊடுருவதற்கும் உதவுகிறது.
வெர்மிகுலைட்டில் உள்ள சிறுதுளைகள், தண்ணீரை நிலைநிறுத்திடவும் உதவுகிறது. இது, மண்ணின் கார அமில (பி.ஹெச் – 7) நிலையை நிறுத்துவது, கேட்டயான் பரிமாற்றத்தன்மை போன்ற வேதியியல் பண்புகளைக் கொண்டது.
இந்தத் துகள்களில் கனிமசத்துக்கள் நிறைந்து உள்ளன. இந்தத் துகள்களின் மேலுள்ள தன்மை கனிமச்சத்துக்களை உரச்சத்தாக மாற்றக்கூடியது. பயிர்களுக்கான நுண்ணூட்டச் சத்துக்களை மண்ணில் இடும்போது, அதன் முழுமையான பலன் செடிகளுக்குச் சென்று சேரும் எனச் சொல்ல முடியாது. ஆனால், நுண்ணூட்டச் சத்துக்களுடன் வெர்மிகுலைட் கலந்து இடும்போது, நாம் மண்ணில் இடும் சத்துக்கள் முழுவதும் வீணாகாமல் செடிகளுக்குச் சென்று சேர்கின்றன. எனவே, இது மிகச் சிறந்த ஊடகமாகச் செயல்படுகிறது.
ரைஸோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கலந்த கலவையில் நடத்தப்பட்ட செடியின் வளர்ச்சியை விட சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது வெர்மிகுலைட் கனிமத்துடன், கரி, ஹியூமிக் அமிலம் பழுப்பு நிலக்கரி ஆகியவைக் கலந்து செரிவூட்டலாம்..
வெர்மிகுலைட்டின் நீர் மேலாண்மைத் தன்மை!
குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும்போது, தோட்டம் எப்படி அமைப்பது என்று கவலைப்படுபவர்களுக்கு வெர்மிகுலைட் நல்ல தீர்வாக இருக்கும். வெர்மிகுலைட்டை மண்ணுடன் கலந்து செடிகளை நடவு செய்தால், குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி மாடித்தோட்டம் அமைக்கலாம்.
மண் மற்றும் பிற இயற்கை உரங்களுடன், வெர்மிகுலைட் கலந்து, அந்தக் கலவையில் செடிகளை நடவுசெய்தால், ஒரு முறை ஊற்றும் தண்ணீரை அடுத்த சில நாட்கள் வரை, வெர்மிகுலைட் தன்னுள் பிடித்துவைத்து, செடிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்கும்.
அத்துடன், இதில் உள்ள சில கனிமச்சத்துக்கள் பயிர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதுடன், பயிர்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்துகின்றன.
செறிவூட்டப்பட்ட வெர்மிகுலைட், தண்ணீரில் கலந்துள்ள கடின உலோகங்களை அகற்றி சுத்தப்படுத்தும் தன்மைகொண்டது. இதனால், வெர்மிகுலஒட் கலந்த கலவையைப் பயன்படுத்தி, தொழிற்கூடங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில்கூட பயிர்களை வளர்க்கலாம்.
ஆழமாகக் குழி எடுக்க வேண்டும். குழி ஆறிய பின்னர், குழியிலிருந்து எடுத்த மண்ணுடன் மூன்றில் ஒருபங்கு வெர்மிகுலைட்டை கலக்கவேண்டும்.
செடியை குழிக்குள் வைத்து, வேரைச் சுற்றிலும் மேற்படி வெர்மிகுலைட் கலந்த மண்ணைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும். வெர்மிகுலைட் கலந்த மண்ணுடன் தொழுவுரம், மண்புழு உரங்கள் ஆகியவற்றையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
மண்ணில் கலந்துள்ள வெர்மிகுலைட், வேர்கள் எளிதில் ஊடுருவிச் செல்வதற்கும், சல்லிவேர்கள் நன்கு படர்ந்து வளரவும் வழிவகைச் செய்கிறது. வேர்களுக்கு காற்றோட்டத்தைத் தருகிறது. வேர்கள் சூரிய வெப்பத்தினாலும், காற்றினாலும் வறட்சிய அடைவதிலிருந்து வெர்மிகுலைட் பாதுகாக்கிறது.
செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான மண்ணிலுள்ள அம்மோனியம் , பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை மிக எளிதில் வேர்கள் இறிஞ்சிட வழிவகைச்செய்யும் தன்மைகொண்டது வெர்மிகுலைட். இதன் கார அமிலத்தன்மை நிலை 7 ஆக இருப்பதால், செடிகள் செழித்து வளரும். வளர்ச்சிக்கு உதவும் அதே நேரம் செடிகளில் நோய் பரவுவதையும் கட்டுப்படுத்துகிறது,
வெர்மிகுலைட் மிகவும் எடை குறைவானதும், எளிதில் பிற பொருட்களுடன் கலந்திடும் தன்மையும் உடையது. எனவே, விவசாயிகளும், மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கும், மற்ற இடுபொருட்களுடன் வெர்மிகுலைட்டை கலந்து இட்டால், நாம் கொடுக்கும் இடுபொருட்களின் முழுமையான பலனை அடையலாம்.