இந்தப் பூச்சிதான் சோளத்தை அதிகமாக தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துமாம்...
அசுவிணி பூச்சி
இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சி உண்ணக் கூடிய தன்மை கொண்டவை. இப் பூச்சிகள் பொதுவாக சோளப் பயிரில் நடுக்குருத்தில் காணப்படும். மேலும், இலைகளின் அடிப்பாகத்தில், தண்டுப்பகுதி மற்றும் சோளக் கதிர்களிலும்கூட காணப்படும். இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சி உண்ணுவதால், இலைகள் மஞ்சளாக மாறும்.
சில நேரங்களில் இலைகளின் ஓரங்கள் கருகிக் காணப்படும். இப் பூச்சிகள் சாற்றை உறிஞ்சிக் கொண்டே தேன் போன்ற ஒரு திரவப் பொருளை கழிவாக வெளியேற்றுகின்றன. கதிரில் இப் பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவை அறுவடையைப் பாதிக்கும். இந்த அசுவிணி ஒரு வகையான வைரஸ் நோயை பரப்பக் கூடிய தன்மையுடையது.
சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாடு: ஒரே சமயத்தில் விதைத்தும் மற்றும் முன்பட்டத்தில் விதைப்பதாலும் குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ மற்றும் கதிர் நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம்.
குருத்து ஈயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ சோள விதைக்கு 4 மிலி குளோரிபைரிபாஸ் அல்லது 4 மிலி பாசலோன் அல்லது 4 மில்லி மானோ குரோட்டோபாஸ் மருந்தையும், 0.5 சதவீதம் கோந்தையும், 20 மிலி நீரில் கரைத்து விதை நேர்த்தி செய்து, 12 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
நேரடி விதைப்பில் 5 கிலோ விதையைப் பயன்படுத்தி, நெருக்கி விதைத்த பின்னர், குருத்து ஈ, தண்டுப்புழு, அடித்தேமல் நோய் தாக்கிய செடிகளைக் களைத்து விடலாம்.
ஊடு பயிராக தட்டைப்பயறு அல்லது மொச்சைப் பயிரிடுவதால் தண்டுப்புழு தாக்குதலைக் குறைக்க முடியும். வயல் வரப்புகளில் உள்ள களைகளை அகற்றி அழிப்பதால், குருத்து ஈ, தண்டுப்புழு, கதிர் ஈ தாக்குதலைக் குறைக்கலாம்.