மண் அரிப்பை தடுக்க இதெல்லாம் செய்தாலே போதும்...
மண் அரிப்பை தடுக்க
நன்றாக திட்டமிட்டு சில மரங்களை வளர்த்தால், வெள்ளநீர் வயலுக்குள் வராமல் தடுக்கலாம். முதலில் வயலைச் சுற்றி மூன்றடி உயரத்துக்கு மண்ணை மேடாக்க வேண்டும். மேடாக்கிய மண்ணில் மூன்று அடுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்.கரையின் வெளிப்புறம் முதல் அடுக்கு, உட்புறம் இரண்டு அடுக்கு என்று நட வேண்டும்.
** முதல் அடுக்கு:
5 அடி இடைவெளியில் பனை மரங்களை வளர்க்க வேண்டும். பனை மரங்களுக்கு இடையில் தாழை மரங்களை வளர்க்கலாம். தாழை, குறுமரம் என்பதால் இதனுடைய வேர்கள் அடர்த்தியாக இருக்கும்.
இது இரண்டுமே தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, கரையை பாதுகாக்கும். பனைக்கும், தாழைக்கும் இடையில் கத்தாழையை வளர்க்கலாம். கத்தாழை குத்துச் செடி என்பதால் இதுவும் கரையைப் பலப்படுத்தி, நீரோட வேகத்தை தடுக்கும்.
** இரண்டாம் அடுக்கு:
முள் மரங்களை நடலாம். முதல் அடுக்குக்கும், இரண்டாவது அடுக்குக்கும் மூன்றடி இடைவெளி இருக்க வேண்டும்.இலந்தை, நொச்சி, துவரை, கிளுவைனு இடைவெளி இல்லாமல் வளர்க்கலாம். இது மண் அரிமானத்தை தடுக்கும்.
** மூன்றாவது அடுக்கு:
இரண்டாவது அடுக்கிலிருந்து, ஐந்தடி இடைவெளி விட்டு, உட்புறம் மூன்றாவது அடுக்காக, மலைவேம்பு, சவுக்கு, சூபாபுல், சிசு, நீர்மருதுனு மரக்கன்றுகளை மூன்றடி இடைவெளியில் நட வேண்டும். ஆனால், ஒரே மரவகை அடுத்தடுத்து வராமல் பார்த்துக்கொள்ளுவது நல்லது.
உதாரணத்துக்கு, ஒரு மலை வேம்பு நட்டா… அடுத்து, சவுக்கு, சூபாபுல், சிசு, நீர்மருது நட்டுவிட்டு… மறுபடியும் மலைவேம்பில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இந்த மூன்றடுக்கு முறை, வயலுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். வெள்ளநீரை தடுத்து நிறுத்தவதோடு, ஏராளமான தழைச்சத்துக்களையும் மண்ணுக்குள் சேர்க்கும். மூன்றாவது அடுக்கில் இருக்கின்ற மரங்களுக்கு இடையில் கிளரிசீடியாவை வளர்த்தால் இன்னும் அதிகமாக தழைச்சத்து கிடைக்கும்.
அதோடு கால்நடைத் தீவனமாகவும் பயன்படும். சவுக்கு, சூபாபுல் மாதிரியான மரங்கள் 3 முதல் 5 வருடத்துக்குள் பலனுக்கு வந்துவிடும். மலைவேம்பு 10 வருடத்திலும், நீர்மருது, சிசு மாதிரியான மரங்கள் 15 வருடத்திலும் பலனுக்கு வந்துவிடும். இதை வெட்டி வித்து விடலாம்.
அப்படி வெட்டிவிட்டால், மறுபடியும் வெள்ளநீர் உள்ளே புகுந்து விடும் என்று கவலைப்படத் தேவையில்லை. அதற்குள் முதல்,இரண்டாவது அடுக்கில் இருக்கின்ற மரமெல்லாம் வளர்ந்து, இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக நிற்கும். அதனால் வெள்ளநீர் முழுமையாக உள்ளே வரமுடியாது. அப்படியே வந்தாலும் மண் அரிப்பு ஏற்படாது.