விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுக்க இதை செய்தால் மட்டுமே முடியும்....
நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுத்து விட முடியும்.
நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டு பயிர்களை அழிக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு உத்தி.
வேப்பங்கொட்டை கரைசல், இயற்கை பூச்சி விரட்டி கரைசல் போன்றவற்றை பயிர்களில் தெளிப்பதன் மூலம் பயிர்களின் இலைகளில் கசப்புத் தன்மையை உருவாக்கலாம். இதனால் கசப்பு சுவையுள்ள இலைகளை சாப்பிடாமல் தீமை செய்யும் பூச்சிகள் தவிர்த்து விடும். இது இன்னொரு உத்தி.
மேலும், ஆமணக்கு போன்ற செடிகளை வரப்புகளில் நட்டு வைப்பதன் மூலம், தீமை செய்யும் பூச்சிகளை வயல்களுக்குள் இறங்காமல் தடுக்க முடியும். உயரமான இடத்தில் இருக்கும் ஆமணக்கு போன்ற செடிகளில்தான் தீமை செய்யும் பூச்சிகள் முதலில் உட்காரும். ஆகவே, நம் பயிர்களுக்குச் செல்லும் தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
தீமை செய்யும் பூச்சிகளுக்கு நம் பயிர்கள்தான் உணவு. ஆனால் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு தீமை செய்யும் பூச்சிகள்தான் உணவு. தீமை செய்யும் பூச்சிகள் வயல்களில் கொஞ்சமாவது இருந்தால்தான் நன்மை செய்யும் பூச்சிகளும் நம் வயல்களிலேயே தங்கியிருக்கும். ஆகவே, நம் நண்பர்களாகிய நன்மை செய்யும் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுவதால் தீமை செய்யும் பூச்சிகளும் நமது நண்பர்களே.