எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைக்கும்போதும் இவையும் ரொம்ப முக்கியம்...
1.. மின்சார வசதி
பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும். பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும் மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.
2.. காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
திறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும். இதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.
3.. சத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்
சத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள், சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் பண்ணை அமையக்கூடாது.
தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள் சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.
கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும். எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
4.. சந்தை வசதி
கால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.
5.. போக்குவரத்து வசதி
பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும். இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.
6.. இதர வசதிகள்
இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின் குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.