நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்களில் இருந்து அவற்றை காப்பாற்ற இந்த வழிகள் உதவும்...
ரத்தக்கழிசல்
நாட்டுக் கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான்.
வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக் கழிசலுக்கான அறிகுறி.
இந்த நோய்கள் நச்சுயிரிகள் மூலமாகப் பரவுகின்றன. தீவனம், தண்ணீர், காற்று மூலமாக நச்சுயிரிகள் கோழிகளைத் தாக்கும். இவற்றைத் தடுக்க ஆங்கில வைத்திய முறையில் சொட்டு மருந்துகள் மற்றும் ஊசி மூலமாகச் செலுத்தும் தடுப்பு மருந்துகள் உள்ளன.
கடைகளில் இவற்றை வாங்கி நாமே கோழிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது சனிகிழமைதோறும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக் கொள்ளலாம்.
தடுப்பு மருந்துகளைக் குஞ்சுப் பருவத்திலிருந்து அட்டவணைப்படித் தவறாமல் கொடுத்து வர வேண்டும். நாட்டு மருத்துவம் மூலமும் நோய்த் தாக்குதலை விரட்டமுடியும்.
பண்ணையில் உள்ள பெரிய கோழிகளுக்கு அவ்வப்போது சின்ன வெங்காயத்தை நறுக்கித் தீவனமாகக் கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது. அதையும் மீறித்தாக்கினால் அதற்கும் கைவைத்தியம் உண்டு.
10 சின்ன வெங்காயம், ஒரு கரண்டி புளிக்காத தயிர், ஒரு தேக்கரண்டி(டீ ஸ்பூன்) சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஐந்து ஈர்க்குக் கிழாநெல்லி ஆகியவற்றை அரைத்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும்.
இதைக் காலை, மாலை இரண்டு வேளைகளும் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு வாயில் ஊற்றி விடவேண்டும். கோழிகள் குடிக்கும் வரை கொடுக்க வேண்டும். குடிக்க முடியாமல் திமிரும்போது ஊற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் நோய்கள் குணமாகும்.