சிறந்த கறவை மாடுகளை தேர்வு செய்ய பல வழிமுறைகள் இருக்கு: அவற்றில் முக்கியமானவை இதோ…
பால் பண்ணைத் தொழிலை லாபகரமாக செயல்படுத்த சிறந்த கறவை மாடுகள் தேவை. அப்படிப்பட்ட கறவை மாடுகளை தேர்வு செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.
1.. பால் பண்ணைத் தொடங்க முதலில் நல்ல கறவை மாடுகளைத் தேர்வு செய்தல் வேண்டும். அதற்கு கறவை மாடுகள் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
2.. கறவை மாடுகள் வாங்கும் போது பதிவேடுகளை நன்கு பராமரித்து வரும் அரசு கால்நடைப் பண்ணைகள், தனியார் பண்ணைகளிலிருந்து பசுக்களைத் தேர்வு செய்வது சிறந்தது. ஏனெனில் அந்தப் பதிவேடுகளில் பிறந்த தேதி, கன்று ஈன்ற தேதி, கறவைக் காலம், கொடுத்த பாலின் அளவு போன்ற விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருக்கும். அதன்படி, பதிவேடுகள் மூலம் ஆண்டுக்கு ஒரு கன்று, அதிகப் பால் உற்பத்தித் திறன் உள்ள பசுக்களைத் தேர்வு செய்யலாம்.
3.. பதிவேடுகள் என்பது பெரும்பாலும் ஏட்டளவிலேயே உள்ளன. இந்தச் சூழலில் மாடுகளின் தோற்றத்தைக் கொண்டும் அவற்றின் குணாதிசயங்கள் கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். அதாவது, பசுவின் அமைப்புக்கும், அதன் உற்பத்தித் திறனுக்கும் ஓரளவு தொடர்பு உள்ளதென ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
4.. பசுவானது சுறுசுறுப்பாகவும், கண்கள் பிரகாசமாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும். மூக்கின் முன்பகுதி ஈரமாக இருக்கவும், மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும் அகன்றும் இருக்க வேண்டும். மூச்சு விடும் போதோ அல்லது உள்ளிழுக்கும் போதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.
5.. பல் வரிசை சீராக இருப்பதைக் கடைவாய்ப் பல்கள் அனைத்தையும் வாயைத் திறந்து நாக்கை விலக்கிப் பார்த்தல் வேண்டும். அதிக தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
6.. பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியைவிட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உள்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்று அனுமானிக்கலாம்.
7.. பசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் இனப்பெருக்க உறுப்புகள் சிறப்பாக வளர்ந்திருக்கும், கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.
8.. கறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. கறவை மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எலும்புகள் மட்டும் தெரிவது சிறந்ததாகும்.
9.. கால்கள் உறுதியாகவும், நடக்கும் போது சீராக ஊன்றியும் நடக்க வேண்டும். பசுவின் நான்கு கால்களும் உடம்பின் நான்கு மூலையிருந்து நேராக தரையை நோக்கி இறங்கியிருக்கவும், பசு படுப்பதற்கோ எழுவதற்கோ சிரமப்படக் கூடாது.
10.. மடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும், காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் இருக்க வேண்டும். காம்புகள் அதிக நீளமாகவும் இருக்கக் கூடாது. தவிர, பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.
11.. பால் கரந்த பிறகு மடி நன்கு சுருங்க வேண்டும். மாட்டின் கலப்பினத் தன்மைக்கேற்ப கணக்கிடப்பட்ட அளவுக்குப் பால் கறக்க வேண்டும். அதற்கு தொடர்ந்து மூன்று நாள்கள் இரு வேளையும் பால் கறந்துப் பார்த்து மாடுகளை வாங்க வேண்டும். பத்து லிட்டர் பாலை எட்டு நிமிஷங்களில் கறக்க வேண்டும்.
12.. பால் கறக்கும் போது கால்களைக் கட்டியோ அல்லது மாடுகளைப் பிடித்துக் கொண்டோ கறக்கும் பழக்கமுள்ள மாடுகளை வாங்குவது நல்லதல்ல. மேலும், மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது, மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் கொடுக்கும். எனவே, மாடுகளை முதல் மூன்று ஈற்று இருக்குமாறு பார்த்து வாங்குவது சிறந்தது.