கோழிகளுக்கு கரையான் உணவுகளை கொடுத்து தீவனச் செலவை வெகுவாக குறைக்கலாம்...
கோழிகளுக்கு கரையான் உணவு
கரையான்களில் 36 சதவிகிதம் புரதம், 44 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் கோழியின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் வளர்ச்சி விகிதம் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. இதனால் தீவனச் செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம்.
கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, இற்றுப் போன மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண்பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.
கரையான்களில் உற்பத்தியானது அடைமழைக் காலங்களில் மட்டும் பாதிக்கப்படுவதுண்டு. இது தவிர பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட இடங்களில் கரையான்கள் உற்பத்தி ஆவது இல்லை.
இது தவிர, எறும்பு புற்று அதிகமாக உள்ள இடங்களிலும் கரையான்கள் உற்பத்தியாகாது. எனவே, கரையான்களை உற்பத்தி செய்ய முற்படும் போது இது போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும்.
கோழிகளுக்கு ஏற்ற தீவனங்கள்
வண்ணக் கோழிகளுக்கு கரையான்களை தவிர வழக்கமான தீவனங்களை அளித்து வளர்க்கலாம். கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங் கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாதுப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.
இவை தவிர வேலிமசால், குதிரைமசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய பெரிய அளவில் இடவசதி தேவையில்லை. ஒரு தடவை நட்டால் 5 ஆண்டுகள் வரை தொடர்ந்து இவற்றை அறுவடை செய்து பசுந்தீவனம் தயாரிக்கலாம்.