அதிக சத்து கொண்ட கிழங்குகளில் முதன்மையானது சேனை கிழங்கு. இதனை சாகுபடி செய்யும்

பரப்பளவும் சற்று குறைத்து விட்டது. விவசாயிகள் பணப்பயிர்களை அதிகம் பயிரிட ஆரம்பித்துவிட்டதால் சேனை கிழங்கு சாகுபடி கணிசமான அளவு குறைந்துவிட்டது. மண்ணில் விளையக்கூடிய கிழங்குகளில் அளவில் பெரியது சேனை கிழங்கு.

சேனை கிழங்கை ஆனி, ஆடி பட்டத்தில் நடுவது சிறப்பு. சேனை பத்து மாத பயிர். எட்டாம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். பொங்கல் பண்டிகை நோக்கி அறுவடை செய்ய படுகிறது. பசுந்தாள் உரத்தை விதைத்து பின் மடக்கி உழுது அதன் பிறகு கிழங்கு ஊன்றுவது சிறந்தது.

சேனை கிழங்குக்கு நிலத்தை மிக ஆழமாக உழவு செய்து ஏக்கருக்கு பதினைந்து டன் மக்கிய தொழு உரம் அடி உழவில் இட வேண்டும். 

ஏக்கருக்கு கிட்ட தட்ட 1800 கிலோ விதை கிழங்கு தேவை. நடவு செய்ய இடைவெளி 2×2, 2.5×2.5 அல்லது 3×3 அடி விடவேண்டும். மரப்பயிர்களில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்கின்றனர். ஒரு கிழங்கை நான்கு அல்லது ஐந்து பகுதிகளாக வெட்டி பின் நடப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தொடந்து ஒவ்வொரு பாசனத்தின் போதும் பாசன நீரில் கலந்து விடுவது சிறந்தது. உயிர் உரங்களை மண்ணில் இடுவதால் நன்கு திரட்சியான கிழங்குகள் கிடைக்கும்.

சேனையில் பூச்சி தாக்குதல் சற்று குறைவு. கற்பூரகரைசல் தெளித்தால் அணைத்து பூச்சி தாக்குதல்களும் சரியாகி விடும். அதிகமாக நீர் தேங்கினால் தண்டு அழுகல் வர வாய்ப்பு. அதே சமயம் நன்கு ஈரப்பதம் இருக்க வேண்டும். 

சேனை கிழங்குக்கு ஒரு களை போதுமானது. களை எடுக்கும்பொழுது நன்கு மண் அனைத்து விட வேண்டும். அறுவடை பருவம் வந்த உடன் தண்டு முழுவதும் பழுத்து காய ஆரம்பிக்கும். விலை இல்லை என்றால் அப்படியே வயல்களில் விட்டு விட்டு பின்னர் கூட அறுவடை செய்யலாம்.

ஏக்கருக்கு இருபது டன்கள் அதிகபட்ச மகசூல் கிடைக்கும். ஒரு கிழங்கு மூன்று கிலோ அளவிற்கு வர வாய்ப்பு உள்ளது.

நம் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் சேனை கிழங்கில் இருப்பதால் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மாடி, வீட்டு தோட்டத்தில் நட்டு வைத்தால் தானே வளர்ந்து பயன் கொடுக்கும். மாடி தோட்டத்திற்கு ஏற்ற கிழங்கு வகை.