வெள்ளைப் பொன்னி சாகுபடி செய்வதால் இரட்டிப்பு லாபம் பெறலாம். எப்படி?
வெள்ளைப்பொன்னி சாகுபடி:
பருவம்:
ஆவணி, புரட்டாசியில் வெள்ளைப் பொன்னியைத்தான் சாகுபடி செய்கிறார்கள்.
ஏற்ற மண்:
இந்த ரகம் எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்வதற்கு ஏற்றது. விவசாயிகள் களர் நிலத்திலும் இதை சாகுபடி செய்து பலன் அடைந்துள்ளனர்.
விதைப்பு
வெள்ளைப் பொன்னியை சாகுபடி செய்ய 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். 8 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்து 20 கூடை மக்கிய தொழு உரம் இடவேண்டும்.
மேலும், 16 கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். நாற்று செழிப்பாக வரும். நடவு வயலுக்கு அதிக அளவு நன்கு மக்கிய இயற்கை உரம் இடவேண்டும். இதற்கு நான்கு ட்ரெய்லர் லோடு இயற்கை உரம் இடவேண்டும்.
நடவு – களை
விவசாயிகள் மரங்களின் தழைகளையும் சேற்றில் போட்டு மிதித்துவிடலாம். வெள்ளைப் பொன்னிக்கு இயற்கை உரங்கள் அதிகம் இட்டு ரசாயன உரத்தைக் குறைத்தால் பயிர் கீழே சாயாது. மேலும் பயிர் பாதுகாப்பு செலவும் குறையும்.
வயலில் டிஏபி அரை மூடை மற்றும் பொட்டாஷ் அரை மூடை, யூரியா 5 கிலோ இவைகளை இடலாம். நடவு வயலில் சரியாக அண்டை வெட்டி சீராக சமன் செய்ய வேண்டும்.
சமன் செய்த நிலத்தில் ஏக்கரில் 12 கிலோ ஜிங்க் சல்பேட்டினை தேவையான ஆற்று மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும். உடனே நாற்றினை வயலில் வரிசை நடவு போடவேண்டும்.
வரிசைக்கு வரிசை 9 அங்குலமும் வரிசையில் குத்துக்கு குத்து 9 அங்குலமும் இடைவெளி விட்டு 30 நாட்கள் வயதுடைய நாற்றினை குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடவேண்டும். இவ்வாறு செய்தால் சாயும் தன்மை கொண்ட பயிரை வயலில் சாயாமல் நிற்க செய்யலாம். இதனால் கதிர்கள் வாளிப்பாக வரும். மகசூலும் அதிகம் கிடைக்கும்.
நட்ட பயிருக்கு இரண்டு முறை களையெடுக்க வேண்டும். நடவு நட்ட 25 நாட்களுக்கு பிறகு மேலுரமாக யூரியா 15 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3 கிலோ இடவேண்டும். சாகுபடி சமயம் பயிரை கண்காணித்து பூச்சி, வியாதிகள் வராமல் தடுக்க வேண்டும்.
இம்மாதிரியாக சாகுபடிசெய்தால் ஏக்கரில் 30 மூடைகள் (மூடை 75 கிலோ) மகசூலாகக் கிடைக்கும். மூடைக்கு விலை ரூ.900 வரை கிடைக்கும்.
விவசாயிகள் வைக்கோல் விற்பனையிலும் ரூ.1500 வரை பெற முடியும். இதனால், வெள்ளைப்பொன்னி சாகுபடி செய்தால் இரட்டிப்பு இலாபம் பெறலாம்.