Season for seedling from seed to first seed treatment

நிலக்கடலை சாகுபடி

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜூன் - ஜூலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களே ஆகும்.

இரகங்கள்

உயர்விளைச்சல் இரகங்களைத் தேர்வு செய்து அவற்றில் விதை உற்பத்தி செய்வது நல்லது. ஏனெனில் அவைகள் அதிக உரமிடலைத் தாங்கும், குறைந்த வயதுடையவை. பூச்சி நோய் எதிர்ப்புத் திறன் உடையவை. அவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும்.

விளை நிலம் தேர்வு

• நல்ல வளமான செம்மண்பாங்கான காற்றோட்டமும் நல்ல வடிகால் வசதி உடைய நிலமாக இருக்க வேண்டும்.

• போரான் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச்) சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் தரமான நல்ல விதைகளைப் பெறமுடியும்.

விதைத் தேர்வு: 
7.2 மி.மீ. வட்டமுள்ள வட்டக்கண் சல்லடை கொண்டு சலித்து நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத பொருக்கு விதைகளையே விதைப்புக்காக பயன்படுத்த வேண்டும். உடைந்து போன, சுருங்கிய மற்றும் மிகவும் வற்றிப்போன நோய் தாக்கிய விதைகளை நீக்கிவிட வேண்டும்.

விதை அளவு (ஒரு ஏக்கருக்கு)

சிறிய பருப்பு விதைகள் (டிஎம்வி2, 7 போன்ற இரகங்கள்) = 50-55 கிலோ

பெரிய பருப்பு விதைகள் (ஜேஎல்24, விஆர்ஐ2) = 55-60 கிலோ

பயிர் விலகு தூரம்:- 

நிலக்கடலை முற்றிலும் தன் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிராகும். விதைக்கப் பயிரிடப்படும் இரகத்தை மற்ற இரகங்கள் பயிரிடப்படும் நிலத்திலிருந்து 3 மீட்டருக்கு அப்பாலுள்ள நிலத்தில்தான் பயிரிடவேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முந்திய இரண்டு பருவங்களில் மற்ற இரக நிலக்கடலை பயிரிட்டிருக்கக் கூடாது.

விதை நேர்த்தி :-

பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நல்ல வகையில் அமையும் வண்ணம் விதைக்கும் செய்யப்படும் சில வழிமுறைகளே விதை நேர்த்தி ஆகும்.

நிலக்கடலையில் விதைமூலமும் மண்மூலமும் பரவும் வேர் அழுகல் தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயிர் எண்ணிக்கையைச் சீராகப் பராமரிக்கவும் இராசயன பூசணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாணக் கொல்லி அல்லது உயிரியல் பூஞ்சாண மருந்தான டிரைக்கோடெர்மா விரிடியைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். 

காற்றில் கரைந்துள்ள நைட்ரஜன் சத்தை பயிருக்கு அளிக்க டிஎன்ஏயூ14 ரைசோபியம் என்ற நுண்ணுயிரைக் கொண்டும் விதைக்கு விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்க வேண்டும்.

பூசணக் கொல்லி விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திராம் மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். விதை நேர்த்தி செய்த விதைகளை குறைந்த பட்சம் 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது.

பூஞ்சாண விதை நேர்த்தி

டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைப்பருப்புக்கு 4 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். விதையை விதைப்பிற்கு முன் ஈரப்படுத்தி பின் பூஞ்சாணத்தை அதன் மீது தூவி கலக்க வேண்டும்.