கோடை வெயிலின் தாக்கத்திலும் ரூ.1.25 லட்சம் இலாபத்தை தரும் பந்தல் காய்கறி “பாகற்காய்”…

rs 125-lakh-will-impact-the-profitability-of-the-summer


ஒவ்வொரு பருவ காலத்தை முன்னிட்டும், பருவ மழையை பொருத்தும், தக்காளி, வெங்காயம், தட்டைப்பயிர், நிலக்கடலை, சோளம், கத்தரி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதை தவிர, விவசாயிகள் பந்தல் காய்கறி சாகுபடி முறையையும் பின்பற்றி வருகின்றனர். பந்தல் காய்கறி சாகுபடி என்பது அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடப்பதாகும்.

கோடை வெயிலின் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும், பந்தல் காய்கறிகள் எனப்படும் பாகற்காய், புடலங்காய், பேர்க்கங்காய் போன்றவற்றின் மகசூலை விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்.

பந்தல் காய்கறிகளின் முக்கியமானது பாகற்காய் கோ-1, எம்டியூ-1, கேபிசிஎச்-1, அபிஷேக் அனுபம் என்எஸ்-1024, போலி, எப்-1 போலி, வினாய் ஆகிய ரகங்களில் உள்ளன.

நல்ல வடிகால் வசதியும், அங்ககப் பொருட்கள் அதிகம் கொண்ட மணற்பாங்கான மண் இருந்தால் கொடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மிதமான வெப்பநிலை இருந்தால் வளர்ச்சி அதிகரிக்கும். வெப்பநிலை குறைவாக  இருக்கும்போது கொடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். வெப்பநிலை மிகவும் அதிகமாகும்போது பூக்களில் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.

கோடையில் பாகற்காய் விதைப்பு செய்தாலும், அதிக மகசூலை பெற ஜனவரி அல்லது ஜூலை மாதம் சாகுபடியில் இறங்கினால் அதிக மகசூல் கிடைக்கும்.

நடவு வயலினை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஒருமுறையும், பின் சட்டி கலப்பை கொண்டு ஒருமுறையும், அதற்கடுத்து கொக்கி கலப்பை கொண்டு மூன்று முறையும் உழவு செய்ய வேண்டும்.

அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் ஒரு ஹெக்டேருக்கு 469 கிலோ என்ற அளவிலும் தொழு உரம் 25 கிலோவும் இட வேண்டும்.

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்று முறையே ஒரு ஹெக்டேருக்கு இரண்டு கிலோ, சூடோமோனாஸ் குளோராசன்ஸ் 2.5 கிலோ ஆகியவற்றை தொழு உரத்துடன், நன்கு கலந்து மேட்டுப் பாத்தியில் மண்ணுடன் கலந்து விட வேண்டும்.

மேட்டுப் பாத்தியில் சொட்டு நீர் பாசனம் மூலம் 8 அல்லது10 மணி நேரம் நீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்கள் வயதான, ஆரோக்கியமான நாற்றுகளை மேட்டுப் பாத்தியில் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த நாள் முதல் 1 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த இரண்டு வாரத்தில் 6 அடி உயரமுள்ள குச்சிகளைக் கொண்டு பந்தல் அமைத்து கொடி கட்ட வேண்டும். கல்தூண் நட்டி கொடி அமைத்தால் உறுதியாக இருக்கும்.

மணி, தழை, சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில் தெளிப்பதன் மூலம் அதன் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். நடவு செய்த60 நாள் முதல் ரகங்களைப் பொருத்து 180 நாட்கள் வரை அறுவடை செய்யலாம்.

வாரம் ஒருமுறை என்ற அளவில் விதைகள் முதிர்ச்சி அடையும் முன்பே காய்களை அறுவடை செய்ய வேண்டும். ஒரு எக்டேருக்கு 25 டன் முதல் 40 டன் வரை, ரகங்களை பொருத்து மகசூல் கிடைக்கும்.

குறிப்பாக ஒரு ஏக்கரில் பாகற்காய் சாகுபடி செய்து நன்கு பராமரித்தால் அதன் மூலம், ரூ 1.25 லட்சம் வரை வருமானத்தை விவசாயிகள் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios