இயற்கை முறை நெல் சாகுபடியே பிரதானமானது? ஏன்
மதுரையில் பெரியார், வைகை பாசனம் இல்லாததால் சாகுபடி நிலங்கள் தரிசாகவே உள்ளது. இதனால் பல விவசாயிகள் நெல் சாகுபடி செய்யாமல் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மீண்டும் இந்த இடத்தில் நெல் சாகுபடி எப்போது வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இருப்பினும் கிணற்றுப்பாசனத்தில் நெல் விவசாயம் துவங்கி விவசாயிகள் திருப்தியாக உள்ளனர்.
இம்மாதிரியான விவசாயிகளிடம் அதிக பரப்பளவில் நிலம் இருந்தாலும் விவசாயிகள் குறுகிய நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்து லாபம் எடுத்துள்ளனர்.
இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வதே சிறந்தது. இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்தால் பயிர் செழிப்பாக வருவதோடு, அவ்வப்போது பயிரில் வறட்சி ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
காரணம் இயற்கை முறை சாகுபடியில் பயிர்கள் ஓரளவிற்கு வறட்சியைத் தாங்குகின்றது. அதேபோல் இந்த பயிரானது கொடிய பூச்சி, வியாதிகளால் பாதிக்கப்படுவதில்லை.
இயற்கை விவசாயத்தில் இரண்டு நெல் ரகங்களை தேர்ந்தெடுத்து தனித்தனி வயல்களில் சாகுபடி செய்யலாம்
சாகுபடி செய்யும் விவரம், அனுசரித்த சாகுபடி முறைகள்:
- இரகம் - எபீடி 45
வயது - 120 நாட்கள்
மகசூல் - ஏக்கரில் 36 மூடை (மூடை 66 கிலோ)
ஒரு மூடை நெல் விலை – ரூ. 1100
வரவு (36 மூடை * ரூ.1,100) – ரூ. 39,600.00
சாகுபடி செலவு – ரூ. 18,000.00
நிகர லாபம் – ரூ. 21,600.00
வைக்கோல் – ரூ. 2,500.00
- இரகம் - ஜே-13
வயது - 100 நாட்கள்.
மகசூல் - ஏக்கரில் 36 மூடை (மூடை 66 கிலோ)
ஒரு மூடை நெல் விலை – ரூ. 1,100
வரவு (36 மூடை * ரூ.1,100) – ரூ. 39,600.00
சாகுபடி செலவு – ரூ. 16,000.00
நிகர லாபம் – ரூ. 23,600.00
வைக்கோல் – ரூ. 2,500.00
ஜே-13 நெல் சாகுபடி செலவு குறைவு. பராமரிப்பு செலவும் குறைவு. வைக்கோல் பஞ்சுபோல் இருக்கும். பசுக்கள் விரும்பி சாப்பிடும்.
கிணற்றுப்பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு வந்துவிட்டார்கள். இவர்களும் பாடுபட்டு உழைத்து கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருக்க தொழில்நுட்பங்களை அனுசரிக்கலாம்.
இதற்காக ஒரு சமுதாய இயக்கத்தை உருவாக்கி கிணறுகளில் தண்ணீர் நிற்க வழி கண்டுபிடிக்கலாம்.
நெல் பயிர் மிக முக்கியமான உணவுப்பயிர். ஆகையால் அந்த நிலங்களில் வேறுபயிர்களை சாகுபடி செய்யாமல் நெல் சாகுபடியையே தொடர்ந்து செய்து வருவதே பாராட்டுக்குரியது.