பச்சைத் தங்கமான மூங்கில் சாகுபடி தொழில்நுட்பம் பற்றி தெரிஞ்சுக்க இதை வாசிங்க...
மூங்கில் மரங்களை மக்களின் நண்பன் என்பர். இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவீதம் மூங்கில் இனங்கள் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் ஒரு இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது.
கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக மூங்கில் இருக்கிறது. மனிதனுக்கு பல்வேறு வகையிலும் பயன்படும் மூங்கிலை பச்சைத்தங்கம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மூங்கிலானது, சேர்வராயன் மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள்,சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி, முதுமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்பட்டு வருகிறது.
சாகுபடி முறைகள்
மண் மற்றும் தட்பவெப்ப நிலை
நல்ல வடிகால் வசதியுடைய மண் வகைகளில் பயிரிடலாம். குறிப்பாக வண்டல் மண், படுகை நிலங்கள், கண்மாய் கரை மண், மணற்பாங்கான நிலங்கள், மலைச்சரிவுகள் மற்றும் வெப்பநிலை 8 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ள இடங்கள்.
நடவு முறை
நிலத்தை நன்றாக உழுது பருவ மழைக்கு முன் நாற்று நட குழிகளைத் தோண்டி தயார் செய்ய வேண்டும். 3க்கு 3 அடி ஆழ, அகலத்தில் குழிகளை தோண்ட வேண்டும். 15 அடி இடைவெளி இருத்தல் வேண்டும். குழியில் தொழு உரம் 10 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், டி.ஏ.பி 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
மூங்கில் தூர் பராமரிப்பு
முதலாம் ஆண்டிலிருந்து பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பில் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும். பக்க கிளைகள் நேராக வளராத கிளைகளை அகற்றவும். தூர்களில் கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும். உதிரும் மூங்கில் இலைகளை தோப்பினுள் பரப்பி உழுது விடவும். இதனால் மண் வளம அதிகரிப்பதுடன் நீர் பிடிப்பை அதிகரிக்கும்.
மூங்கில் அறுவடை
நட்ட நான்காம் ஆண்டிலிருந்து வெட்டலாம். பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டாம் ஆண்டிலிருந்து வெட்டலாம். முதிர்ந்த மூங்கில்களை மட்டும் வெட்டி எடுக்கவும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 400 மூங்கில் தூர்கள் ஒரு தூருக்கு 6 கழிகள் வீதம் 2400 கழிகள் கிடைக்கும்.