வெள்ளாடுகளுக்கு புரதம், தாதுப்பு மற்றும் உலர்ந்த தீவனம் அளிக்கும் முறை ஒரு அலசல்
புரதம்
உடல் வளர்ச்சிக்கும் உடல் உறுப்புகளின் தேய்மானம் சுரப்பிகளின் நொதியம் மற்றும் ஆர்மோன்களுக்கும் பால் உற்பத்திக்கும் புரதம் இன்றியமையாதது. ஆகவே மற்ற உயிரினங்களைப் போன்று வெள்ளாடுகளுக்குப் புரதம் தேவைப்படுகின்றது.
ஆனால் அகைபோடும் விலங்கினங்கள் சுத்தப் புரதம் தவிரப் புரதம் சார்ந்த பொருட்களிலிருந்தும் பெருவயிற்று நுண்ணுயிர் மூலமும் புரதம் பெறமுடிகின்றது. ஆகவே மனிதர்களுக்குத் தகுதியற்ற முரட்டுப் புரதங்களிலிருந்து தரமான புரதம் வெள்ளாடுகளால் பெற முடிகின்றது.
45.4 கிலோ எடைக்கு 41 கிராம் புரதம் உடலைப் பேணத் தேவைப்படுகின்றது. அத்துடன் 4.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 227 கிராம் புரதம் தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் சராசரி ஆட்டிற்குப் புரதத் தேவையைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
தாதுப்புத் தேவை
வெள்ளாடுகள் பசுக்களைவிட, 50% அதிக உப்பைப் பாலில் சுரக்கின்றன. ஆகவே வெள்ளாடுகளின் உப்புத் தேவை அதிகம். ஆகவே கொடுக்கும் கலப்புத் தீவனத்தில் 1% சாதா உப்பு கொடுக்க வேண்டும். பிற தாது உப்புத் தேவையை நிறைவு செய்யத் தாது உப்புக் கலவையை தீவனத்தில் 2% கலந்து கொடுக்க வேண்டும்.
தாது உப்புக் கலவையிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ், எலும்பு வளர்ச்சிக்கும் அயோடின் உடல் வளர்ச்சிக்கும், குட்டி வளர்ச்சிக்கும், கோபால்ட் வைட்டமின் உற்பத்திக்கும் பயன்படுகின்றன.
உலர்ந்த தீவனம்
நரிப்பயறு, சணப்பு, புல், குதிரை மசால், வேலி மசால் போன்றவற்றைக் காய வைத்துத் தீவனமாக அளிக்கலாம். ஆனால், பசுந்தீவனப்பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இதை எல்லாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.
நிறையப் பசுந்தீவனம் உற்பத்தி செய்பவர்கள் இதனைச் செய்யலாம். பொதுவாகப் பிற விவசாய உப பொருட்கள், உதிரும் இலை, சருகுகளைத் தீவனமாக அளிப்பதே சிறந்தது.