சம்பா சாகுபடியில் நெற்பழ நோய் தாக்குவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…
நெற்பயிரை “நெற்பழ நோய்” தாக்கி அதிக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற நன்மை தரும் பேக்டீரியத்தை பயன்படுத்தலாம்.
நோய் அறிகுறி தென்படுவதற்கு முன் புரபிகோனோசோல் 0.1 சதம் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 0.1 சதம் தெளிக்கவேண்டும்.
அறிகுறிகள்:
பயிர்களில் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு மணிகள் பதறாக மாறும்.
நோய் தாக்குதலில் நெல் மணிகள் கருப்பு அல்லது மஞ்சள் நிற பூசண வித்துக்களைக்கொண்ட பந்துகள் போல் மாறிவிடும். வயலின் உள்ளே செல்லும்போது வயல் முழுவதும் பூசண வித்துக்கள் மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தூள்களாக காற்றில் பறவியிருக்கும்.
இந்த நோய் வந்தால் சுமார் 20 முதல் 80 சதம் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதிப்புக்கான காரணங்கள்:
நெல் பயிர்களில் பூக்கும் மற்றும் மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் தொடர் மழையில் நெற்பழத்தை உண்டாக்கும் பூசணக்கிருமிகள், நெல் பூக்கும் பருவத்தில் எளிதாக தாக்கக்கூடியவாறு தட்பவெப்பநிலை போன்றவற்றால் மகசூல் பாதிக்கும்.
விவசாயிகள் நோய்களைக்கட்டுப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஞ்சாண மருந்துகள் அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகளை உபயோகிக்க தவறியதாலும் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன.
நோயின் பாதிப்பும், பருவகால நிலையும்:
நோயின் தீவிரம், தட்பவெப்பநிலையை பொறுத்து மாறுபடுகிறது. அதிக இரவு பணி, குறைந்த தட்பவெப்பநிலை 21 செல்சியஸ் இருக்கும்போது நெற்பழ நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நெற்பயிர்கள் பூக்கும் தருணத்திலும், பால் பிடிக்கும் தருணத்திலும் ஏக்கருக்கு புரபிகோனோசோல் 200 மிலி அளவிலும், 400 கிலோ என்ற அளவிலும் காப்பர் ஹைடிராக்ஸைடு இழை வழி மூலம் தெளித்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம்.
நோய் மேலாண்மை:
நோய் தாக்கிய வயலில் இருந்து பெறப்பட்ட விதைகளை பயன்படுத்தக்கூடாது. கார்பண்டாசிம் 2 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராமை ஒரு கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்யவேண்டும்.
நடவு வயலில் 1 கிலோ சூடோமோனாஸ் மருந்தை 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து 15 நாள்கள் வைத்திருந்து நடவுக்கு முன் தூவி நடவு செய்யவேண்டும். தழைச்சத்து உரத்தை அதிகம் போடக்கூடாது. பொட்டாஷ் உரத்தை மேல் உரமாக போடவேண்டும்.
நோய் நிர்வாகம்:
கோ-43 இரகம் பயிரிடும்போது ஒருங்கிணைந்த நோய் தடுப்பு முறைகளை கையாள்வது அவசியம். விதைகளை நோய் எதிர் உயிரி பாக்டீரியா, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 1கிலோ விதைக்கு 10 கிராம் அல்லது, கார்பண்டாசிம் 2 கிராம் என்ற அளவில் கலந்து ஈர விதைநேர்த்தி செய்யவேண்டும்.
எனவே விவசாயிகள் சம்பா சாகுபடியில் நெற்பழ நோய் தாக்குவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.