பயிர்களில் பூச்சி, நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் ஒரு அலசல்…

Pest disease monitoring and control methods
pest disease-monitoring-and-control-methods


க. பருத்தி:

1.. சாறு உறிஞ்சிகள்

தேனி மாவட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்படுகின்றன. மஞ்சள் நிற ஒட்டும் பொறியை உபயோகித்து இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் (அ) இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல். என்ற மருந்தினை 100 மி.லி./ ஹெக்டர் (அ) மெத்தில் டெமட்டான் 25 இ.சி. 500 மி.லி./ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுக்களின் நடமாட்டம் குறைவாகவே தென்படுகிறது. இவற்றை இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கட்டுப்படுத்தவும்.

உ. கரும்பு:

1.. தண்டுதுளைப்பான்

சிவகங்கை தஞ்சாவூர், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தண்டுத்துளைப்பான் தாக்குதல் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி. என்ற அளவில் வெளியிடவும்.

2.. செவ்வழுகல் நோய்

செவ்வழுகல் நோய் தாக்குதல் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கரும்புக் கரணைகளை 0.1 சதவீதம் கார்பன்டெசிம் (அ) 0.05 சதவீதம் டிரைட்மெபன் என்ற கரைசலில் 15 நிமிடம் ஊற வைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.

ங. நிலக்கடலை:

1.. இலைச் சுருட்டுப் புழு

நாமக்கல் மாவட்டத்தில் இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தினைக் கண்காணிக்கவும், தேவைப்படின் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் தயாரித்து தெளிக்கவும்.

2.. இலைப்புள்ளி நோய்

தருமபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இலைப்புள்ளி நோய் தென்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்த கார்பன்டெசிம் 0.1 சதவீதக் கரைசல் (அ) மேங்கோசெப் (0.2) சதவீத கரைசல் (அ) குளோரேதலானில் (0.2) சதவீத கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ச. மரவள்ளி, பப்பாளி, மல்பெரி

1.. பப்பாளி மாவுப் பூச்சி:

மரவள்ளி, பப்பாளி, மல்பெரி பயிரிடும் விவசாயிகள் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கண்காணிக்கவும். இவற்றைக் கட்டுப்படுத்த அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களை அணுகி ஒட்டுண்ணிகளை இலவசமாகப் பெற்று மாவுப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

ரு. நெல்:

1.. இலைச்சுருட்டுப்புழு

நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் காணப்படுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டை சாறு 5 சதக் கரைசலைத் தயாரித்து பயிர்களில் தெளிக்கவும் அல்லது பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 600 மி.லி./ ஹெக்டர் (அ) புரோபனோபாஸ் 50 இ.சி. 1,000 மி.லி./ ஹெக்டர் மருந்தினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

2.. இலைப் புள்ளி:

நெல்லில் இளைப்புள்ளி நோய் தாக்குதல் சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மேங்கோசெப் 2.0 கிராம்/ லிட்டர் (அ) எடிபென்பாஸ் 1 மி.லி./ லிட்டர் என்ற முறையில் கலந்து 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோய் தாக்குதலுக்கு ஏற்பட தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

3.. பாக்டீரியா இலைக்கருகல்:

பாக்டீரியா இலைக் கருகல் நோய் தாக்குதல் தருமபுரி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் தென்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்களின் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிராம்/ ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios