ஒரு முறை பயிரிட்டால், பதினைந்து ஆண்டுகளுக்கு மகசூல் தரும் “மல்பெரி”

onetime cultivation-fifteen-years-yielding-malperry


நம் நாட்டில், பட்டுப் புடவை, பட்டு வேட்டிகளுக்கு வரவேற்பு அதிகம். இதனால் பட்டு நூலுக்கு எப்போதுமே தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
இதனால் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை, பட்டுப் புழு வளர்ப்புக்கு ஆதாரமான மல்பெரி சாகுபடி செய்ய விவசாயிகளை அதிக அளவில் இழுத்து வருகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரில் உள்ள தமிழ்நாடு பட்டுப் புழு வளர்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பட்டுப் புழுக்கள் உண்ணும் மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப் புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும்.
மல்பெரிச் செடியானது ஆண்டு முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறைவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களாகவும் பராமரிக்கலாம்.
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும்.
மல்பெரி ரகங்களில் இறைவைப் பயிருக்கு கன்வா 2, எம்.ஆர்.2, வி.1 ரகங்கள் ஏற்றதாகும். இவற்றுள் வி.1 ரகமானது அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒரு ஹெக்டருக்கு 60 டன் இலை மகசூல் தரவல்லது.
மற்ற ரகங்கள் ஆண்டுக்கு ஹெக்டருக்கு 35 முதல் 40 டன் இலை மகசூல் தரும். மானாவாரிப் பயிரிடுவதற்கு எம்.ஆர்.2, எஸ்.1635, எஸ். 34, ஆர்.எப்.எஸ் 175 போன்ற ரகங்கள் ஏற்றவைகளாகும்.

மல்பெரி நாற்றாங்கால்: மல்பெரிச் செடிகள், விதைக் குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
மல்பெரிச் செடியில் அயல் மகரந்தச் சேர்க்கையின் மூலமே விதைகள் உருவாகின்றன. இந்த விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களின் குணாதிசயங்கள் தாய்ச்செடியை ஒத்திருக்காது.
எனவே விதைகள் மூலம் இனப்பெருக்கம் மேற்கொள்ளப்படுவதில்லை. ஒரு ஹெக்டர் மல்பெரித் தோட்டம் அமைக்கத் தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 20 சென்ட் (800 சதுர மீடடர்) நிலம் தேவை.
பூச்சி நோய்த் தாக்காத, 6 முதல் 8 முதிர்வுடைய செடியிலிருந்து விதைக் குச்சிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட குச்சிகளை 3 - 4 பருக்கள் உடைய சிறு விதைக்குச்சிகளாகவும், 15 - 20 செ.மீ. நீளமுள்ளதாக, வெட்ட வேண்டும்.
வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப் பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவுபடாமலும் வெட்ட வேண்டும்.
விதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக் குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் நடவேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு பாத்திக்கு 8 இஞ்சுக்கு 4 இஞ்ச் இடைவெளியில் 150 விதைக்குச்சிகள் வீதம் 1,065 பாத்திகளில் சுமார் 1.60 லட்சம் குச்சிகள் நடவு செய்யலாம்.
விதைக்குச்சிகளை நடவு செய்யும்போது ஒரு கணு வெளியே தெரியும்படி நடவு செய்ய வேண்டும். நாற்றாங்காலுக்கு, 5 முதல் 7 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். குச்சிகளை நட்டது முதல் 45 நாள்களுக்கு களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நடவு செய்த 60 நாள்களுக்குப் பின்னர் ஒரு பாத்திக்கு 30 கிராம் வீதம் யூரியா உரமிட வேண்டும். அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களை மல்பெரி பயிருக்கு ஒரு ஆண்டுக்கு ஹெக்டருக்கு 20 கிலோ என்ற அளவில் இட்டு ரசாயன உரத் தேவையை 25 சதவீதம் (75 கிலோ) குறைத்துக் கொள்ளலாம்.
பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை ஹெக்டருக்கு ஆண்டுக்கு 10 கிலோ என்ற அளவில் இடும்போது மணிச்சத்து பரிந்துரையில் 25 சதவீதத்தை (30 கிலோ) குறைத்துக் கொள்ளலாம்.
பயிர் மகசூலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பது களைகளே ஆகும். இதனால் சுமார் 40 சதவீதம் வரை இலை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை கவாத்துக்குப் பின் களை நீக்கம் செய்ய வேண்டும்.
மல்பெரியில் ஒரு கிலோ இலை உற்பத்திக்கு 320 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப் பாசனம் மேற்கொள்ளும்போது 40 சதவீத நீரைச் சேமிக்க முடியும்.
தண்ணீர் சற்றே உப்புத் தன்மை உடையதாக இருந்தாலும் சொட்டு நீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை.பட்டுப் புழுவின் வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ, தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது.
இவ்வாறு செய்யும்போது மல்பெரிச் செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்க வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செடியை அடிவெட்டு வெட்டி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் செடி நட்டதிலிருந்து 12 முதல் 15 ஆண்டுகள் குறைவின்றி மகசூல் பெறலாம். ஒரு கிலோ ரூ.400-க்குக் குறையாமல் விற்று வருமானம் பெறலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios