சொட்டு நீர்ப் பாசனத்தைவிட நீர் சேமிப்புக்கு ஒர் சிறந்த முறை. “நீலத்தடி நீர்பாசன முறை”
கரும்பு ஓர் ஆண்டு பயிர். இதற்கு 2000 முதல் 2500 மி.மீ. அளவு நீர் தேவை. பருவமழை போக எஞ்சியுள்ள மாதத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, நிலத்தடி நீர்ப்பாசனம் முறையை மேற்கொண்டு நீர் பற்றாக் குறையை சமாளிக்கலாம். இதனால், மொத்த விளைச்சலும் அதிகரிக்கும். மேலும், நமது மொத்த நீர்ப்பாசனப் பரப்பையும் அதிகரிக்கலாம்.
நிலத்தடி நீர்ப்பாசனம்:
நிலத்தடி நீர்ப்பாசனம் அல்லது அடிப்பரப்பு நீர்ப்பாசனம் என்பது வழக்கத்தில் உள்ள சொட்டு நீர்ப்பாசனம் போல் அல்லாமல் பயிருக்கு மிகத் துல்லியமான அளவு நீரினை சரியான அளவு உரம், பூச்சிக்கொல்லி மருந்துடன் வேருக்கு நேரடியாகக் கொடுப்பதாகும்.
இந்த பாசன முறையின் முக்கிய நோக்கம்:
1.. பக்கவாட்டில் நீர் பரவுதல் மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவை குறைத்தல்,
2.. பயிரின் வேரைச்சுற்றி நீர் இருத்தல்.
3.. வேரின் நான்கு புறமும் வட்டவடிவில் நீரைப் பரவச்செய்து மண்ணில் கீழ்நோக்கிய நீர்க்கசிவு,
4.. பக்கவாட்டில் நீர் பரவுவதைக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
5.. உரம், பூச்சிக்கொல்லி மருந்தினை நீருடன் கலந்து கொடுப்பதன் மூலம் அதிக, தரமான விளைச்சல் கிடைக்கிறது.
நீர்ப்பாசனம் அமைக்கும் முறை:
25 முதல் 30 செ.மீ. அளவு அதாவது முக்கால் அடி முதல் ஒரு அடி வரை ஆழமும், 40 செ.மீ. அகலமும் உள்ள அகழியை நீளவாக்கில் எடுக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி முதல் ஐந்தரை அடி வரை இருக்கு மாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறைந்த செலவு உள்பக்கவாட்டு குழாய்களை அகழியின் நடுவில் 25-30 செ.மீ. ஆழத்தில் வைத்து சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைக்க வேண்டும். பின் அதன்மேல் 2.5 செ.மீ. அளவு மண்ணைப்போட்டு மறைத்தல் வேண்டும்.
இரு பரு கரணைகளைப் பக்கவாட்டு குழாய்களுக்கு இரு பக்கமும் ஒன்றரை கரணையாக அடுக்கி, பின் கரணை மூடும் அளவிற்கு மண்ணைப் பரப்பி மூடுதல் வேண்டும். மீதமுள்ள அகழியினைப் பயிர் நன்கு முளைத்தபின் (40-45வது நாள்) மூடி பயிருக்கு மண்ணை அணைக்க வேண்டும்.
இந்த பாசன முறையில் கிடைக்கும் நன்மைகள்:
1.. ஒரே சீராக இருக்கும். பயிர் வளர்ச்சி குறைந்த அளவு கீழ்நோக்கிய நீர்கசிவு பக்கவாட்டில் நீர் பரவுதல் குறைய வாய்ப்பு உள்ளது.
2.. காற்று சூரிய வெப்பத்தினால் மண் மேற்பரப்பிலுள்ள ஈரப்பதம் வீணாதல் குறையும்.
3.. பயிருக்கு தேவையான அளவு நீரினை மிகச்சரியான அளவு நீருடன் உரம், பூச்சிக்கொல்லி மருந்தினைக் கொடுப்பதன் மூலம் பயிரின் தரமும் விளைச்சலும் அதிகரிக்கிறது.
4.. நோய், பூச்சி தாக்குதல் குறைவு.
5.. வரிசைக்கு வரிசை பயிரின் இடையே களை முளைத்தல் குறையும்.
6.. பரந்த மிக துரிதமாக வேர் வளர்ச்சியடையும்.
7.. சொட்டு நீர்ப் பாசனத்தைவிட நீர் சிக்கனமாக செலவாகும்.
சொட்டு நீர்ப்பாசனம் / நிலத்தடி நீர்ப்பாசனம் வேறுபாடுகள்:
சொட்டு நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் கீழ்நோக்கி இருப்பதால் கீழ்நோக்கிய நீர்க்கசிவு பக்கவாட்டில் நீர்பரவுதல் அதிகமாக இருக்கும். ஆனால் நிலத்தடி நீர்ப்பாசனத்தில் சொட்டுவான் மேல்நோக்கி இருக்குமாறு அமைப்பதால் வேரின் நான்குபுறமும் வட்டவடிவில் நீர் பரவி பயிரின் வேரை எப்பொழுதும் ஈரத்துடன் வைத்துக் கொள்கிறது.
இதனால் பயிர் எப்பொழுதும் செழிப்பாக இருக்கும். மேலும் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்து மண்ணில் நீர் நுண்புழை நீர் பரவும் விதத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர் பெருகி மண்வளம் கூடுகிறது.