மாமரத்தில் உண்டாகும் சத்துக் குறைபாடும், தீர்வும்...
போரான் சத்துக் குறைபாட்டால் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் பெங்களூரா, அல்போன்ஸா, செந்தூரா, நீலம் போன்ற பல்வேறு பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. நீலம் பழ ரகம் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகமானது பருவம் முடிவடையும் காலத்தில் காய்க்கக்கூடியது. வருடம் முழுவதும் சீராக மகசூல் தரக்கூடியது.
மா சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான நிலங்கள் மணல் கலந்த செம்மண் பூமியாக காணப்படும். இத்தகைய மண் வளம் குறைவாக காணப்படும். எந்த பயிரும் நன்கு வளர்ந்து நிறைய மகசூல் தரவேண்டும் என்றால் நல்ல மண்ணும், குறைவில்லா ஊட்டச் சத்துகளும் இருக்க வேண்டியது அவசியம்.
மா சாகுபடியைப் பொறுத்தவரையில் பேரூட்டம் மட்டுமல்லாது, நுண்ணூட்டம் இடுவதும் அவசியம். ஊட்டச் சத்துக்களில் குறிப்பாக போரான் நுண்ணூட்டம் பழப்பயிர்களில் சர்க்கரைச் சத்து இடமாற்றத்துக்கும், வளர்ச்சி ஊக்கியின் நடமாட்டக்கும் மகரந்த தூள்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது ஆகும்.
காய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடியது போரான் சத்து. மா-வில் போரான் சத்துக் குறைபாடு இருப்பின் குருத்துகள், இலைகள் காய்வதோடு மட்டுமல்லாமல் கிளைகளில் வெடிப்புகள் தோன்றும். மேலும், காய்கள் உதிர்தல், காய்களில் கொப்பளங்கள் தோன்றுதல், பழங்களில் வெடிப்புகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்தக் குறைபாட்டைப் போக்க 0.25 சதவீத போராக்ஸ் கரைசலை பூ பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் தெளிப்பதினால் போரான் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்து மா-வில் அதிக மகசூல் பெறலாம்.