நாட்டு வெண்டை சாகுபடியில் லாபம் மட்டும் 75 ஆயிரம் ரூபாய்…
வெண்டை மாதிரியான காய்கறிகளை ரசாயனம் இல்லாம சாகுபடி செய்யவே முடியாது. பூச்சி, நோய் தாக்குதல்களைச் சமாளிக்கிறது சாதாரண காரியமில்லை. தொடர்ச்சியா பூச்சிக்கொல்லி அடிச்சுக்கிட்டே இருந்தா தான் பயிரைக் காப்பாத்தி ஓரளவுக்காவது வருமானம் பார்க்க முடியும். என்பது பொய்யான தகவல்.
இயற்கை வழி விவசாயத்தில் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும். இயற்கை முறையில் வெற்றிகரமாக வெண்டை சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்க்கலாம்.
சீக்கிரம் வதங்காது!
இரசாயன முறையில் வீரிய ரக வெண்டி சாகுபடி செய்தால் பெருசா சொல்லிக்கிற மாதிரி சுவை இருக்காது. ஆனா, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச நாட்டுரக வெண்டி அற்புதமான சுவையோட இருக்கும்.
நாட்டுரக வெண்டியில சுவை அதிகமா இருக்கும். அதனாலதான் இதுல பூச்சிதாக்குதல் குறைவா இருக்கு. வீரிய ரகங்கள்ல காய்கள் பெருசு பெருசா இருக்கும். ஆனா, திரட்சியா இருக்காது.
நாட்டு ரக வெண்டிக்காய் சின்னதா இருந்தாலும், விதைகள் நெருக்கமா, அதிக எண்ணிக்கையில நல்லா திரட்சியா இருக்கிறதுனால, அதிகமா எடை நிக்கும். இதைப் பறிச்சி, மூணு நாள் கழிச்சிக்கூட விற்பனை பண்ணலாம். சீக்கரத்துல வதங்காது என நாட்டு வெண்டையின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சாகுபடி செய்யும் முறை:
அரை ஏக்கர் நிலத்தில் நாட்டு வெண்டையை சாகுபடி செய்யும் விதம்:
சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 3 அடி இடைவெளியில் வரிசை வரிசையாக வாய்க்கால் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நிலத்தை ஈரப்படுத்தி, வாய்க்கால் உள்கரைகளில் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு ஒரு குச்சியால் ஓர் அங்குல ஆழத்துக்குக் குழி பறிக்க வேண்டும்.
100 கிராம் ஆட்டு எருவை மண்ணோடு கலந்து குழியில் போட்டு, தலா 2 விதைகள் போட வேண்டும். அரை ஏக்கரில் விதைப்பு செய்ய ஒன்றரை கிலோ நாட்டு வெண்டை தேவைப்படும்.
3 -ம் நாள் முளைப்புக்கு வரும். 7 -ம் நாள் இலைகள் உருவாகும். 10 -ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.13 -ம் நாள் களை எடுக்க வேண்டும்.
20 -ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 25 -ம் நாள் வெண்டை வரிசைகளுக்கு இடையே 2 அடி அகலம், முக்கால் அடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து, அந்த மண்ணைக் கொண்டு வெண்டைச் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
30-ஆம் நாள் பூ பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, வடிகட்டி, தெளிப்பான் மூலம் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால், அடுத்த ஒரு வாரத்தில் செடி நன்கு ஊட்டமாக, செழிப்பாக வளரத் தொடங்கும். பூக்களும் அதிகமாக உருவாகும்.
20 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 35 -ம் நாள் மூலிகைப் பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும். இதனால் இலைப்பேன் தாக்குதல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம்.40 -ம் நாள் பாசன நீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும்.
காய்ப்புழுத் தாக்குதல் வராமல் தடுக்க 42 -ம் நாள் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். 55 -ம் நாள் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை, வேப்பிலை மூலம், செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால் சப்பாத்திப் பூச்சிகள் வராமல் முழுமையாக தடுக்க முடியும்.
15 நாட்களுக்கு ஒரு முறை இது போல் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். வெண்டைச் சாகுபடியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் என்பதுபெரும் சவாலனது. செடிகள் சுணங்கி கிறங்கி விடும். இலைகள் சுருங்கிவிடும். எவ்வளவு தான் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அடித்தாலும், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.
மொத்தம் 60 பறிப்பு!
“வீரிய ரக வெண்டியை விட, நாட்டுரக வெண்டி செடியின் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனா, வீரிய ரக வெண்டியை விட, இதுல கூடுதலா பக்கக் கிளைகள் உருவாகி, காய்ப்பு அதிகமாக இருக்கும்.
விதைப்பிலிருந்து 40- ம் நாள் காய் பறிப்புக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிப்போம்.அரை ஏக்கர் நிலத்துல இருந்து முதல் பறிப்ப்புல 10 கிலோ, அடுத்த பறிப்புல 25 கிலோ, அதுக்கு அடுத்த பறிப்புல 60 கிலோன்னு மகசூலதிகரிச்சுகிட்டே போகும்.
6-வது பறிப்புல இருந்து அடுத்த 25-30 பறிப்புகள்ல ஒவ்வொரு முறையும் 130-150 கிலோ காய்கள் கிடைக்கும். அதுக்குப் பிறகு படிபடியா மகசூல் குறையும்.
மொத்தம் 60 பறிப்பு பறிக்கலாம். காய் பறிப்புக்கு வந்ததுல இருந்து அடுத்த 120 நாள் வரைக்கும் காய்ப்பு இருக்கும். சராசரியா 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குறைந்தபட்சம்15 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 26 ரூபாய்க்கு விலை போகுது. சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய் விலை கிடைக்குது.
இயற்கை முறையில விளைஞ்சதுனாலயும், சுவையா, தரமா இருக்கிறதுனாலயும்வீடு தேடி வந்து மக்கள்வாங்கிக்கிட்டுப் போறாங்க. அந்த அரை ஏக்கர் இயற்கை வகை நாட்டுரக வெண்டி சாகுபடி மூலமாக 160 நாள்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபமாக மிஞ்சுது.
160 நாளுக்கு பிறகும் கூட செடிகள் உயிர்ப்போடு இருக்கு. செடியை கவாத்து பண்ணி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் கொடுத்தோம்னா, அடுத்த 80 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.
ரசாயன முறையில்சாகுபடி செய்ற வீரியரக வெண்டியோட மொத்த வயசே 120 நாட்கள்தான். விதைப்பிலிருந்து 40 -ம் நாள் காய்ப்புக்கு வரும். அதுல இருந்து அடுத்த 80 நாள்தான் காய்ப்பு இருக்கும்.
அதுக்கு பிறகு கவாத்து பண்ணி ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துக்கும் அதிகமா செலவு செஞ்சு, பச்சக் குழந்தையைக் கவனிக்கைற மாதிரி பராமரிச்சாகணும். அந்தளவுக்கு பூச்சி, நோய்த் தாக்குதல்களை எதிர்கொள்வது ரொம்பவே சவாலானது.
எந்த மண்ணில் விளையும்!
நாட்டு வெண்டை, வடிகால் வசதியுள்ள மண் வகையில் சிறப்பாக விளையும். ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். ஆனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்தால், ஆவணி, புரட்டாசி மாதங்களில் காய்ப்புக்கு வரும்போது பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் அதிகம். இதனால் விற்பனை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். அதிக விலையும் கிடைக்கும்.