செயற்கை வழியைவிட இயற்கை வழி விவசாயம்தான் தக்காளிக்கு சிறந்தது. ஏன்?
செயற்கை உரங்களை பயன்படுத்தி தக்காளி சாகுபடி செய்வதைக் காட்டிலும், இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.
பருவம்:
தக்காளி சாகுபடி பொதுவாக கோடைப் பருவத்திலும் இல்லாமல், மழைக் காலத்திலும் இல்லாமல் இடைபட்ட காலத்தில் செய்வது அதிக லாபம் தரும். மேலும் பூச்சிகளின் தாக்குதல், நோய் பாதிப்பில் இருந்து இப்பருவத்தில் எளிதாக காக்க முடியும்
நாற்றங்கால் முறை
மண்ணைத் தோண்டி அடித்தாள்களை அகற்ற வேண்டும். 10 நாள்கள் சிதைவு ஏற்பட நிலத்தை விட்டு விட வேண்டும். வடிகால் நன்றாக அமைவதற்கு உயரமான பாத்திகள் அமைக்கவும்.
தொழு உரம் அல்லது கம்போஸ்ட், செம்மண், மணல் ஆகியவற்றை சம அளவில் நன்றாக கலந்து நிலத்தில் இட வேண்டும். தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லத்தை 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.
பாஸ்போ பாக்டீரியாவையும் 1 சதுர மீட்டருக்கு 20 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நாற்று அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கோதுமைத் தவிடு, மக்கிய மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து இட வேண்டும்.
விதை நேர்த்தி:
நாட்டு ரக விதைகள் ஒரு ஹெக்டேருக்கு 400 கிராமும், வீரிய ஓட்டு ரக விதையாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 150 கிராமும் இட வேண்டும்.
விதை உற்பத்தி நிறுவனங்களால் ரசாயனப் பொருள்களை கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தவிர்க்க வேண்டும்.
விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன், 1 கிலோ விதையை ட்ரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து நேர்த்தி செய்யலாம்.
விதைப்பதற்கு முன் 400 கிராம் விதையுடன் 40 கிராம் அசோஸ் பைரில்லத்தை கலக்க வேண்டும்.
வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 20 கிராமுக்கு 150 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும். நாற்றங்கால் பாத்தியில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு வரிசையாக விதைக்க வேண்டும்.
நடவு வயல்:
சரியான ஈரப்பதத்தில் வயலை 3 அல்லது 4 முறை உழவு செய்யவேண்டும். 10 நாள் சிதைவு ஏற்படுவதற்காக விட வேண்டும்.
பசுந்தாழ் உரமாக சணப்பை விதைத்து 35 நாட்களுக்குப் பின் மடக்கி உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஹெக்டேருக்கு 25 டன் வீதம் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இடலாம்.
நடவுக்கு முன் 20 கிலோ தொழு உரத்துடன் அசோஸ் பைரில்லம் 2 கிலோ (1 ஹெக்டேருக்கு) பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ ஆகியவற்றை கலந்து இட வேண்டும்.
60 செ.மீட்டர் இடைவெளியில் பார்கள், உழவு சால்கள் அமைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
பேசில்லஸ், துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும். தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
புள்ளியிட்ட அழுகல் வைரஸ் தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.
அறுவடை:
முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. இலை மற்றும் செடியின் அனைத்து பாகங்களையும் எடுத்து அவற்றை கம்போஸ்ட் செய்யவேண்டும்.
மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்