மெத்தைலோ பாக்டீரியா என்னும் நன்மை செய்யும் நுண்ணுயிர் உரம்…
இலைகளின் மேற்புறத்திலும் உட்புறத்திலும் வாழும் பாக்டீரியாக்களில் மெத்தைலோ பாக்டீரியா என்றும் நன்மை செய்யும் பாக்டீரியா மிக முக்கியமானது.
இப்பாக்டீரியா செடிகளின் இலைப்பரப்பிலும் வேர் மண்டலத்திலும் காற்று, தண்ணீர், மண், கல் அனைத்து இடங்களிலும் (காற்று போகாத இடங்கள் தவிர) காணப்படுகிறது.
இலைகளில் வேதியல் கூறுகள் மூலம் பல கரிமப்பொருள்கள் உருவாகின்றன. அவைகளில் மெத்தனால் என்னும் கரிமப்பொருள் முக்கியம் வாய்ந்தது. இந்த மெத்தனால் இலைகளில் பெக்டின் எனப்படும் கரிமப்பொருள் உயிர்வேதியல் முறையில் சிதைவடையும் போது உருவாகிறது.
மெத்தைலோ பாக்டீரியா இலைகளில் இருப்பதால் ஸ்டொமேட்டா மூலம் வெளியாகும் இந்த மெத்தனாலை உணவாக உட்கொண்டு வாழ்கிறது. மாறாக மெத்தைலோ பாக்டீரியா செடிகளுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின் ஆக்ஸின்களை அளிப்பதன் மூலம் செடிகள் நன்கு வளர்ச்சியடைகின்றன.
பி.பி.எப்.எம்.ஐ திரவ நுண்ணுயிர் உரமாக பயன்படுத்தலாம். இந்த பாக்டீரியா ஆய்வகத்தில் வளரும்போது இளஞ் சிவப்பு நிறம் உடையதாக இருப்பதால் இது பொதுவாக பிபிஎப்எம் என்று அழைக்கப்படுகிறது.
விதைகளை நடுவதற்கு முன்பாக விதைகளின் கடினத் தன்மையைப் பொறுத்து பிபிஎப்எம் நுண்ணுயிர் திரவ கரைசலில் 5 முதல் 15 நிமிடம் நன்கு ஊறவைத்து பின்பு நிழலில் 15 நிமிடம் உலர வைத்து நடுவதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் நாற்றுக்களின் வீரியம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது.
மேலும் விதைகளின் முளைப்புக் காலம் ஒன்று முதல் இரண்டு நாட்கள் குறைக்கப்படுகிறது. பிபிஎப்எம் திரவ நுண்ணுயிர் உரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், பயிர்களின் வளர்ச்சி, வளர்ச்சி காலம், பூக்கும் காலம், காய்க்கும் காலம் 5 முதல் 7 நாட்கள் வரை குறைக்கப்படுகிறது.
மேலும் காய்கள், பூக்கள், பழங்களின் நிறம், திடம், பருமன் அதிகரிக்கிறது. பூ, காய் பிடிக்கும் பருவத்தில் பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பூக்கள், காய்கள் உதிர்வதைத் தடுக்கலாம்.
தென்னை, மா, கொய்யா, பப்பாளி, முருங்கை, மாதுளை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலமாக வேர்களுக்கு சென்று அடையுமாறு கொடுக்கலாம். அல்லது கைத்தெளிப்பான் அல்லது விதைத் தெளிப்பானைக் கொண்டு கைக்கு எட்டும் உயரம் வரை இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
நீர்ப்பற்றாக்குறை அல்லது வறட்சியால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு பிபிஎப்எம் தெளிப்பதன் மூலம் பயிர்கள் நீரின் தேவையின்றி 5 முதல் 10 நாட்கள் வரை (மண்ணின் ஈரப்பதம் பொறுத்து) வாடாமல் வறட்சியைத் தாங்கும் தன்மையைப் பெறுகின்றன.
இந்த பிபிஎப்எம் ஐ இயற்கை பயிர் ஊக்கி என்றும் அழைக்கலாம். இந்த திரவ நுண்ணுயிர் உரத்தை உபயோகிக்கும் போது ஒட்டும் திரவம், அரிசி கஞ்சி ஆகியவற்றை சேர்க்க தேவையில்லை.