மரவள்ளியைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் ஒரு அலசல்…
மரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான செஞ்சிலந்தி, வெள்ளை ஈ, மற்றும் மாவுப் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
இந்தப் பூச்சிகள், இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் இலையின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதோடு இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் வெகுவாக குறையும்.
1.. செஞ்சிலந்தி:
செஞ்சிலந்திகள் மஞ்சள் வண்ணத்தில் மிகவும் சிறியதாகவும் கூட்டமாகவும் மரவள்ளி இலைப்பரப்பின் மத்தியில் இருந்துகொண்டு சாற்றினை உறிஞ்சும். இதனால் மரவள்ளி இலைகளில் வரிக்கோடுகள் காணப்படும்.
செஞ்சிலந்திகளை பொதுவாக நம் கண்களால் காண இயலாது. உருப்பெருக்கி அல்லது நுண்ணோக்கி மூலம் இவைகளை காண முடியும். இதனால் இலைகளில் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
1.. தாக்குதல் மத்திமமாக இருப்பின் ஒரு சத புங்கம் எண்ணெய் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும்.
2.. தாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயன பூச்சிக்கொல்லிகளான “டெகாசஸ் 3.5 இசி’ ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி. அல்லது “புராப்பர்கைட் 5 இசி’ ஒரு லிட்டருக்கு நீருக்கு 1.5 கிராம் என்ற அளவிலும், கார்பன்டஸிம் ஒரு லிட்டருக்கு நீருக்கு 2 கிராம் என்ற அளவிலும் கலந்து இலைகளின் நடுப்பகுதி நனையும்படி தெளிக்க வேண்டும்.
2.. மாவுப்பூச்சி:
மாவுப் பூச்சியானது வெள்ளை ஈ போல் ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின் கீழ்ப்பரப்பில் அடைபோல் வெண்மை நிற படலமாக ஒட்டிக்கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும்.
மரவள்ளி செடியில் பொதுவாக ஐந்தாவது இலைகளிலிருந்து மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
1.. மாவுப்பூச்சி தாக்குதல் உள்ள இலைகளையும், செடியின் கீழ் பாகத்தில் உள்ள இலைகளையும் ஒடித்து விட வேண்டும்.
2.. பொதுவாக 33 சதம் ஸ்டார்ச் உள்ள மரங்களில் உள்ள விதை கரணைகளையே பயன்படுத்த வேண்டும். சாய்வு முறையில் நடவுச் செய்வதால் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
3.. முசுக்கொட்டை செடிகள் (மல்பெரி செடிகள்), நெய்வேலி காட்டாமணக்கு போன்ற செடிகளை வரப்பு ஓரங்களில் பயிர் செய்து இதன் தாக்குதலை குறைக்கலாம்.
4.. திறன்மிகு ஒட்டுண்ணியான “அசிரோபேகஸ் பப்பையே’ என்ற ஒட்டுண்ணியை செடிகளில் ஏவி விட வேண்டும். இரை விழுங்கிகளான “கிரிப்டோலீமஸ் மான்ட்ரோசூரி’ என்ற ஆஸ்திரேலிய பொறி வண்டுகளை ஒரு ஏக்கருக்கு 500 என்ற எண்ணிக்கையில் ஏவி விட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் என்ற அளவில் “வெர்டிசிலியம் லீக்கானி’ என்ற உயிரக பூஞ்சாணத்தை தெளிப்பதால் மாவுப்பூச்சியின் மீது நோய் உருவாகி அதனை இறக்கச் செய்யும்.
5.. தாக்குதல் மத்திமமாக இருப்பின் 3 சத வேப்ப எண்ணெய்யை ஒரு லிட்டர் நீருக்கு 25 மி.லி. அல்லது மீன் எண்ணை சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
6.. தாக்குதல் அதிகமாக இருப்பின் ரசாயண பூச்சிக்கொல்லியான “புரபனோபாஸ்’ ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
3.. வெள்ளை ஈ:
மரவள்ளி செடிகளில் பொதுவாக முதல் நான்கு இலைகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படும்.
வெள்ளை ஈ, வெள்ளை நிறத்தில் சிறிய ஈ போன்று இருக்கும். இந்த பூச்சிகளுக்கு இறக்கை இருப்பதால் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பறந்து சென்று “மொசைக்’ என்ற வைரஸ் நச்சுயிரி நோயினைப் பரப்பும்.
இதனால் இலைகளில் உள்ள பச்சையம் குறைந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
1.. இந்நோய் தாக்கிய மரவள்ளிச் செடிகளை பிடுங்கி எடுத்துவிட வேண்டும்.
2.. துத்தி செடிகளையும், மற்ற களைச் செடிகளையும் வரப்பு மற்றும் வயல் வெளிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
3.. வெள்ளை ஈ தாக்குதல் உள்ள வயல்களில் மணத்தக்காளி செடிகளை ஆங்காங்கே பயிர் செய்வதால், மணத்தக்காளி செடிகளில் வெள்ளை ஈக்கள் தாக்குதலை ஏற்படுத்தும். மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளை, ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் மரவள்ளிச் செடிகளை நோக்கி இருக்குமாறு காலை 4 மணி முதல் 6 மணி வரை அமைப்பதால் மஞ்சள் வண்ணத்தை நோக்கி வெள்ளை ஈக்கள் கவரப்படும்.
4.. அதிகமான தழைச்சத்து உரங்களையும், தேவைக்கு அதிகமான நீர் பாசனங்களையும் பயிர்களுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.