கால்நடை மற்றும் கோழி தீவனமான அசோலாவும், அதன் உற்பத்தி முறையும்…

Livestock and poultry feeder Azolla and its production line ...
Livestock and poultry feeder Azolla and its production line ...


அசோலா

அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம்.

அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன.

பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது.

அசோலா உற்பத்தி முறை:

நிழல் பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும்.

நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும்.

15 நாள்களில் ஒரு பாத்தியில் (10ஷ் 2ஷ் 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும்.

அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.

அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கால்நடை மற்றும் கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது கால்நடைகள் அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் தவிடு, புண்ணாக்கு அல்லது பிற அடர் தீவனத்துடன் கலந்து மாடுகளுக்குத் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios