வீரிய ஒட்டுரக வெள்ளரி சாகுபடிக்கு இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாமே…
வீரிய ஒட்டுரக வெள்ளரி விதை நடவு செய்து இஸ்ரேல் தொழில்நுட்பத்தில்
‘பாலிஹவுஸ்’ குடில் அமைத்து மகரந்த சேர்க்கை இல்லாமல் 32-வது நாளில் இருந்து மகசூல் ஈட்டுகின்றார் பெரியகுளம் விவசாயிகள்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தில் 3 ஏக்கரில் மா சாகுபடி செய்துள்ள இவர்கள், தோப்பில் காலியாக இருந்த 27 சென்ட் இடத்தில் வெள்ளரி விதைத்து சொட்டுநீர் பாசன முறையில் தேவைக்கு ஏற்ப உரம், மருந்து பயன்படுத்துகின்றனர்.
சாகுபடி பக்குவம்
“அடியுரமாக இயற்கை உரம் இட்டதால் வெள்ளரி கரும்பச்சை நிறத்தில் காய் ஒன்று 200 கிராம் முதல் 250 கிராம் எடையில் காய்க்கிறது. வெள்ளரி கொடி மேல்நோக்கி 10 அடி உயரம் சென்ற பின், அதனை திரும்ப தரைநோக்கி வளர விடுகிறோம்.
ஓரடி நீளத்தில் காய்கள் கிடைக்கின்றன. தினமும் 5 முதல் 10 பெட்டிகளும் சீசனில் 20 பெட்டிகள் வரை வெள்ளரி கிடைக்கிறது. ஒரு பெட்டி 25 கிலோ எடை கொண்டது. தற்போது மார்க்கெட்டில் குறைந்த பட்ச விலை கிலோ ரூ.20-க்கு போகிறது.
இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் ரூ.15 லட்சம் செலவில் ‘பாலி ஹவுஸ்’ அமைத்துள்ளேன்.
தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் ரூ.4.67 லட்சம் மானியம் கிடைத்தது. 120 நாட்களில் குறைந்தது 13 டன் மகசூல் பெறலாம்.
ஒரு டன் ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ.3.25 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்யலாம். நாள் ஒன்றுக்கு குறைந்தது ரூ.2500 வருவாய் கிடைக்கிறது. உரம், தண்ணீர், மருந்து, பராமரிப்பு என ரூ.500 ஆகும்.
கோடை சீசனில் தேவை அதிகரிக்கும் போது கிலோ ரூ.35 வரை விலை உயரும். அதிகபட்ச மகசூல் 16 டன் வரை எடுக்கலாம்.
வெள்ளரிக்கு பெங்களூருவில் நல்ல வரவேற்பு உள்ளது. காய் சென்றவுடன் பணம் கைக்கு வந்துவிடும்.
துபாய்க்கு வெள்ளரி அனுப்ப ஆர்டர் பெற்றுள்ளோம். அங்கு கிலோ ரூ.90-க்கு விற்பனையாகிறது. அனுப்பும் செலவு போக கிலோவிற்கு ரூ.30 மிஞ்சும்.
விமானத்தில் தினமும் 500 கிலோ அனுப்ப தயாராகி வருகிறோம். இந்த குடில் 20 ஆண்டுகளுக்கு பயன்தரும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கூரை மட்டும் மாற்றினால் போதும்.