Asianet News TamilAsianet News Tamil

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்: சுற்றுச்சூழல் மாசடைவது குறைவு; செலவு குறைவு: ஆனால் வரவு அதிகம்!

Integrated pest management reduction of environmental pollution Less expensive but much credit
integrated pest-management-reduction-of-environmental-p
Author
First Published Mar 31, 2017, 1:10 PM IST


நாற்றங்கால் மற்றும் நடவு வயலைத் தயார் செய்து பின்னர் நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்வது வழக்கம்.

பிசானப் பருவத்தில் பூச்சித் தாக்குதலானது நாற்றங்கால் தொடங்கி அறுவடைவரை அதிகமாகவே இருக்கும்.

பூச்சிகள் இல்லாவிடினும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே தெளிக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு செலவு அதிகமாவதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புற சூழலையும் மாசுபடுத்துகிறது. உண்ணும் உணவும் நஞ்சாகிறது.

எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைக் கடைப்பிடித்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைப்பதுடன், செலவைக் குறைத்து வருமானத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்:

1.. வயல் வரப்புகளை வெட்டி சுத்தம் செய்து வெட்டுக்கிளிகளின் முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும்.

2.. வயல்களில் வரப்புகளை குறுகலாக அமைப்பதன் மூலம் எலியைக் கட்டுப்படுத்தலாம்.

3.. வயல் வரப்புகளில் உள்ள மரங்களின் நிழல்கள் வயலில் விழாதவாறு மரக்கிளைகளை வெட்டி விடுவதால் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது.

4.. இலை நுனிக்கு அருகில் இடப்பட்டுள்ள முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிப்பதன் மூலம் தண்டுப் புழுவின் தாக்குதல்களைக் குறைக்கலாம்.

5.. பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் பயிரிடுவதால் அதிக காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சத்தால் புகையான், தண்டு துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு மற்றும் ஆனைக் கொம்பன் போன்ற பூச்சிகளின் தாக்குதல் குறைந்து காணப்படுகின்றன.

5.. நிலம் சற்று காய்ந்த பின்னர் நீர் பாய்ச்சுதல் என்ற முறையைப் பின்பற்றுவதால் புகையானின் தாக்குதலை வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

6.. பரிந்துரைக்கப்பட்ட உர அளவை மட்டுமே இடவேண்டும். அதிக அளவு தழைச்சத்து இடுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதனால் புகையான் மற்றும் இலை மடக்குப் புழுவின் சேதம் குறையும்.

7.. இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த தென்னை மட்டையைப் பயன்படுத்தி பறவை தாங்கி மற்றும் ஆந்தை பந்தம் அமைப்பதால் இரட்டைவால் கரிச்சான் குருவிகள் மற்றும் ஆந்தைகளின் மூலம் பூச்சிகளைக் குறைக்க முடியும்.

8.. விளக்குப் பொறி அமைத்து தண்டுப்புழு மற்றும் இலை சுருட்டுப் புழுவின் அந்திப் பூச்சிகள், புகையான், தத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.

9.. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் மற்றும் டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி இலைச் சுருட்டுப்புழு மற்றும் தண்டுப்புழுவின் முட்டைகளை அழிக்க வேண்டும்.

10.. தாவரவகை பூச்சிக் கொல்லிகளான வேம்பு மற்றும் வசம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி இலை சுருட்டுப் புழு மற்றும் கதிர் நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

11.. பூச்சிகளின் இயற்கை எதிரிகளான புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான், சிலந்திகள் மற்ரும் மீரிட் நாவாய் பூச்சி போன்றவை அதிகமாகக் காணப்படும்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

12.. சாறு உறுஞ்சும் பூச்சிகளான புகையான், நெல் சிலந்திகளின் மறு உற்பத்தித் திறனை அதிகரிக்கக் கூடிய செயற்கை பைரித்ராய்டு மருந்து அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

13.. நெற்பயிரில் பூச்சிகளின் பொருளாதார சேத நிலையைக் கணக்கிட்டு அதற்கேற்ப சிபாரிசு செய்யப்படும் மருந்தை சரியான அளவு நீருடன் கலந்து சரியான நேரத்தில் அடிக்க வேண்டும்.

14.. ஒரே மருந்தை திரும்ப திரும்ப அடிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடிக்க வேண்டும். ஒட்டும் திரவம் 1 மி.லி லிட்டர் என்ற அளவில் மருந்துடன் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்கவும்.

15.. விவசாயிகள் நேரடியாக மருந்து கடைகளை அணுகாமல் எந்தெந்த பூச்சிக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பதை நெல் ஆராய்ச்சி மையத்தையோ, வேளாண்மை கல்லுரியையோ அல்லது வேளாண்மை உதவி மையத்தையோ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios