Asianet News TamilAsianet News Tamil

ஆடுகளை வெகுவாக தாக்கும் நோய்களும்  அவற்றை தடுக்கும் முறைகளும்...

Infectious diseases of the sheep and prevention
Infectious diseases of the sheep and prevention
Author
First Published Mar 8, 2018, 1:18 PM IST


1.. வெக்கை நோய்: 

அதிக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, சாணம் நாற்றம் அடித்தல், உடல் மெலிதல், கண், மூக்கு, வாய் வழியே நீர் வடிதல், உதடுகளின் உள்புறம் ஈறுகள், நாக்கின் அடிப்பாக பகுதிகளில் புண்கள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த நோய் வந்த ஆடுகளில் 75 சதம் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விடுகின்றன.

இந்த நோய் தாக்காமல் இருக்க ஆறுமாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஒரு முறை தடுப்பூசி போட்டால் 3 ஆண்டுக்கு நோய் வராது. நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அகற்றி கிருமி நாசின் மருந்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

2.. ஆட்டம்மை நோய்: 

வாய், பின்னங்கால்களுக்கு இடைப்பட்ட பகுதி, வாலுக்கு அடிப்புறம், பால்மடி போன்ற இடங்களில் கொப்புளங்கள் தோன்றுதல், அதிக காய்ச்சல், இரை தேட திறனில்லாமை நோயின் அறிகுறியாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை மற்ற ஆடுகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.

3.. அடைப்பான் நோய்: 

அதிக காய்ச்சல், தொண்டை மற்றும் நாக்கு பகுதியில் வீங்குதல், மூக்கு, காது வழியாக ரத்தல் கசிதல் ஏற்பட்டு இறக்க நேரிடும். இக்கொடிய நோய் ஒரு வகை நுண்ணுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும்.

இறந்த கால்நடைகளிலிருந்து இந்த வியாதி அதிவிரைவில் பரவுவதோடு, மனிதர்களையும் பாதிப்பதால் இறந்த கால்நடைகளை ஆழ புதைத்தோ, எரித்தோ விட வேண்டும். நோய்வாய்ப்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

4.. துள்ளுமாரி நோய்: 

மழை பெய்த பிறகு வரக்கூடிய இந்த நோய், துளிர்ப்புல்லை அதிகம் மேய்வதால் நுண்ணுயிரியினால் தாக்குகிறது. நடக்கும் போது திடீரென துள்ளி விழுந்து இறந்து விடும். இதைத் தவிர்க்க அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

5.. கோமாரி நோய்: 

ஒரு வகை நச்சுயிரியினால் ஏற்படுகிறது. தீவனம், தண்ணீர் உள்கொள்வது குறையும். வாயின் உள்புறம் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு புண் உண்டாகும். குளம்பின் நடுவிலும், மேல்புறத்திலும் புண்கள் இருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் அதிகமாக வடியும்.

இந்த நோயினால் உயிரிழப்பு குறைவாக இருப்பினும் வளர்ச்சி குன்றி கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படும். குட்டிகளின் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். நோய் பாதிப்புக்குள்ளான ஆடுகளை தனியாகப் பிரித்து பராமரிப்பதோடு, பாலை குட்டிகளுக்கு கொடுக்கக் கூடாது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios