நன்மை செய்யும் பூச்சிகளை காக்க இன்னொரு வழியும் இருக்கு…
நன்மை செய்யும் பூச்சிகளை காக்க சூழலியல் விவசாய முறை
இயற்கையில் தாவர வளர்ச்சி குறித்து அறிந்து, சூழலியல் பார்வையில் நவீன அறிவியல் பயன்பாடே சூழலியல் விவசாயமாகும். இந்த புதிய விவசாய முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் எந்த நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு மருந்தை தெளிக்க வேண்டும்.
பொதுவாக அதிகாலையில் பூச்சிமருந்தை அடித்தால் நன்மை தரும் பூச்சிகளை தீங்கிலிருந்து பாதுகாக்கலாம். அதிகாலையில் நன்மை தரும் பூச்சிகள் மற்றும் தேனீக்கள் இயங்காது.
அடுத்ததாக சில தாவரங்களின் பூக்கள் நண்பகலில் இதழ்மூடிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இந்த தாவரம் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் நண்பகலில் இதழ் மூடிய பூவை அண்டாது. எனவே அத்தகைய நண்பகலில் பூச்சி மருந்தை அடிப்பது நன்மை தரும்.
இவ்வாறு பூச்சிகள் இயக்கம், தாவர இயல்பு முதலியவற்றை அறிந்து பூச்சி மருந்தை தெளித்து பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சூழலியல் விவசாய முறையாகும்.
உலகில் 90 சதவீத உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் நூறு தாவரங்களில் எழுபத்தொன்று தாவரங்கள் பூச்சியினால் மகரந்த சேர்க்கை ஏற்படும் தாவரங்கள் ஆகும்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த அயல் மகரந்தசேர்க்கைக்கு சூழலியல் விவசாய முறை பெரிதும் உதவுகிறது. மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சியினங்கள் அழிந்தால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும்.
தன் மகரந்தை சேர்க்கை ஏற்படும் கத்தரிகாய் போன்ற தாவரத்திலும், அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்றால் அதிகளவு மகசூல் கிடைக்கும்.