எரிவாயு தட்டுப்பாட்டை இப்படியும் சமாளிக்கலாம். எப்படி?
இயற்கை எரி வாயு
விவசாயிகள் மத்தியில் முன்பு சாண எரிவாயுத் தயாரிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், சாண எரிவாயுக்கலன் அமைக்க 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதோடு, அதைப் பராமரிப்பதும் சிரமமாக உள்ளது.
இதுபோன்ற சில காரணங்களால் சாண எரிவாயு உபயோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஆனால், இந்தச் சிரமங்களைத் தவிர்க்கும் விதத்தில்தான் பாலிதீன் ஷீட் மூலம் சாண எரிவாயுக்கலன் தயாரிக்கப்படுகிறது.
இரண்டு மாடுகள் இருந்தால், ஒரு கன மீட்டர் அளவுக்குத் தினமும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குச் சமையல் செய்ய இந்த அளவு எரிவாயு போதும்.
பாலிதீன் ஷீட் மூலம் கலன் அமைக்க, 6 ஆயிரத்து 500 ரூபாய்தான் செலவாகும். செங்கல், சிமென்ட்… எதுவும் தேவை இல்லை. நான்கரை அடி சதுரத்தில் 4 அடி ஆழத்துக்குக் குழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில், பாலிதீன் ஷீட்டைப் போட்டு கலன் அமைத்து விடலாம். அதில், சாணத்தைக் கரைத்து ஊற்றினால்… சில நாட்களில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி விடும். பாலிதீன் ஷீட் பலூன் போல உப்பி விடும். அதில் இருந்து அடுப்புக்கு, இணைப்புக் கொடுத்து எரிக்கலாம்.
‘சில்லரி’ என்று சொல்லப்படும், கழிவு வெளி வருவதற்கும் இக்கலனில் அமைப்பு உள்ளது. இக்கழிவை இயற்கை உரமாகப் படுத்தலாம்.
எளிதாக அமைத்து விடக்கூடிய இந்தக் கலன் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் திறன் வாய்ந்தது. சேலம், கோயம்புத்தூர், ஈரோடு போன்ற நகரங்களில் இந்த பாலீதீன் ஷீட் எரிவாயுக் கலன் கிடைக்கிறது.”