நெல் சாகுபடியில் நடவை இப்படி மேற்கொண்டால் தான் மகசூல் அதிகரிக்கும்...
நெல் சாகுபடியில் நடவு...
அடி உரமாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் கோழி உரம் மற்றும் அசோஸ் பைரில்லம் பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ் புளோரசன்ஸ் ஒவ்வொன்றும் ஒரு கிலோவீதம் நன்கு மக்கிய குப்பையில் கலந்து பயன்படுத்தவும்.
நடவு செய்த பின்னர் 30 முதல் 40 நாளில் மேலுரமாக 500 முதல் 1000 கிலோ பயிரின் வயர்ச்சியைப் பொருத்து கோழி உரம் பயன்படுத்த வேண்டும். வேறு தொழு உரங்களையும் பயன்படுத்தலாம். அத்துடன் ஏற்கனவே குறிப்பிட்ட நுண்ணுயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்டது தவிர நடவு வயலில் முன்கூட்டிய பலவகை தானியங்களை ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ என்ற அளவில் விதைத்து 30 முதல் 60 நாட்களில் இதனை மடக்கி உழுது நெல் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொழு எரு அளவை பாதியாகக் குறைக்கலாம்.
வயதான நாளுள்ள நெல் வகைகளுக்கு தூர்கட்டும் திறன் குறைவாக இருக்கும். இதனை சரிக்கட்ட நடவு சமயம் ஒரு குத்துக்கு 4 முதல் 6 நாற்றுக்கள் பயன்படுத்தி நெருக்கி நடவு செய்ய வேண்டும்.
பல்வகைப் பயிர் வளர்ப்பு
இயற்கையான முறையில் ஊட்டங்களை நிறைவு செய்வதற்கான முதல்படி பல்வகைப் பயிர் வளர்ப்பாகும். இதன்படி நிலத்தை 200 நாட்களில் வளம் ஏற்றிவிட முடியும். வேதி உப்புக்களால் வளமிழந்த நிலத்தையும் வளமூட்ட முடியும்.
தவசம் (தானியம்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. சோளம் 1 கிலோ, கம்பு 1 கிலோ, தினை 1 கிலோ, சாமை 1 கிலோ)
பயறுகள் (பருப்புகள்) வகையில் ஏதாவது நான்கு (எ.கா. உளுந்து 1 கிலோ, பாசிப்பயறு 1 கிலோ, தட்டைப் பயறு 1 கிலோ, கொண்டைக் கடலை 1 கிலோ)
எண்ணெய் வித்துகள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. எள் 1 கிலோ, நிலக்கடலை 2 கிலோ, சூரியகாந்தி 2 கிலோ, ஆமணக்கு 2 கிலோ)
பசுந்தாள் பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயறு 2 கிலோ, கொள்ளு 1 கிலோ)
மணப்பயிர்கள் வகையில் ஏதாவது நான்கு (எ.கா. கடுகு 1 கிலோ, வெந்தயம் 1 கிலோ, சீரகம் 1 கிலோ, கொத்தமல்லி 1 கிலோ)
மேலே கூறிய ஐந்து பயிர்களையும் வளர்த்து 50-60 ஆம் நாளில் மடக்கி உழுதால் அதில் கிடைக்கும் ஊட்டங்கள் சமச்சீரானதாகவும் நுண்ணூட்டக் குறைபாடு இல்லாதவாறும் இருக்கும்.
ஒரு ஏக்கருக்கு இது போதும். இருநூறு நாட்களில் நிலம் வளமேறிவிடும். இம்முறையை தபோல்கர் என்ற மராட்டிய அறிஞர் சிறப்பாகச் செய்து காட்டினார். இதன் மூலம் மண்ணில் இருந்து எடுப்பதை மண்ணிற்கே பலமடங்காக்கி உயிர்க்கூளமாகக் கொடுக்கிறோம்.