கரும்பு தோகையை இப்படி பயன்படுத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம்...
கரும்பு உற்பத்தி திறனில் தமிழகம் ஏக்கருக்கு சராசரியாக, 42 டன் பெற்று முதலிடத்தில் உள்ளது. இருந்த போதிலும் கடந்த, 20 ஆண்டுகளாக கரும்பு உற்பத்தியில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை அடைய இயலவில்லை.
பல்வேறு தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியும், விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியும், கரும்பு மகசூலை உயர்த்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது.
கரும்பு பயிரில் ஒரு பருவத்தில் ஒரு ஏக்கருக்கு ஐந்து டன் வரை உலர்ந்த இலைகள் கிடைக்கின்றன. இதில், 28.6 சதவீதம் கிரம சத்தும், 042 சதவீதம் தழை, 0.15 சதவீதம் மணி, 0.50 சதவீதம் சாம்பல் சத்துக்களும் உள்ளன.
உலர்ந்த கரும்புத் தோகைகள் மண்ணோடு கலப்பதால் மண்ணில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் தன்மை மேம்படுகிறது.
மண்ணின் அடர்த்தி குறைந்து அங்ககத்தன்மை அதிகரிக்கிறது. உலர்ந்த கரும்புத்தோகைகளை நீளமாக இருப்பதால், அப்படியே நிலத்தில் இடும்போது உடனடியாக மக்குவது இல்லை.
கரும்பு வெட்டிய வயல்களில் குவியல், குவியலாக கரும்பு தோகைகள் பரவி கிடக்கும்போது வயலை முழுவதும் மூடிவிடுகிறது.
வறட்சி காலத்தில் நீர் பற்றாகுறை இருக்கும்போது, கரும்பு தோகையால் மூடப்பட்ட வயல்களில், 15 நாட்கள் வரை ஈரம் காயாமல் வைக்கப்படுகிறது.
கரும்பில் மகசூல் குறைவுக்கு தண்ணீர் பற்றாகுறை முக்கிய காரணமாக கருதப்படுவதால் இந்த முறை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
கரும்பு வெட்டப்பட்ட வயல்களில் கிடக்கும் தோகைகளை அப்படியே தீ வைத்து எரிக்கும் பழக்கம் இருந்தது. அப்படி செய்வதால் வயலில் உள்ள கோடிக்கணக்கான நம்மை செய்யும் நுண்ணுயிரிகளும், பூச்சிகளும் தீயில் சிக்கி அழிந்து விடுகின்றன.
கந்தகம், தழை, கரிமச்சத்துகளும் எரிந்து வீணாகிறது. தீ வெப்பத்தில் கரும்பு அடிக்கட்டைகள் யாவும் கடும் சூடாக்கப்பட்டு மறுதாம்பு பயிரின் முளைப்புத்திறன் வெகுவாக பாதிப்படைகின்றன. மேல் வேர்களும் வெந்து விடுகின்றன. பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் பாதிக்கிறது.
கரும்பு தோகையை தீ வைத்து அழிக்காமல், அப்படியே வயலில் விட்டு விடுவதால் இயற்கையாக வயலில் மூடாக்கு போடப்பட்டு, நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு கரும்பு அடிக்கட்டையின் முளைப்புத்திறனும் பாதுகாக்கப்படுகிறது.
அனைத்துக்கும் மேலாக சில மாதங்களில் மக்கும் ஐந்து டன்கள் கரும்பு தோகை அடுத்த பயிருக்கு அற்புதமான இயற்கை உரமாகிறது. மக்கிய கரும்பு தோகையில், 0.5 தழை, 0.2 மணி, 1.1 சதவீதம் சாம்பல் சத்துக்களும், ஏராளமான நுண்ணுயிரிகளும் உள்ளன.
தவிர, முதல் மூன்று மாதங்களுக்கு கரும்பு வயலில் தோன்றும் களைகளும் கரும்புத் தோகை மூடாக்கால், பெரிதும் குறைந்து விடுகின்றன. வழக்கமான கரும்பு பயிரை தாக்கும் இளங்கருத்து புழுவின் சேதமும் குறைகிறது.