வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள வீட்டுத்தோட்டத்தை அமைக்கலாம். குறிப்பாக கிராம மக்கள் கொல்லைப்புறத்தில் கோழிவளர்ப்பில் ஈடுபட்டாலும், வீட்டை ஒட்டி சிறிய காய்கறி தோட்டங்கள் அமைத்தால் சிறுசேமிப்புக்கு உதவும். வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெறமுடியும்.

எங்கு அமைக்கலாம்?

வீட்டின் முன்புறம், பின்புறம், வீட்டை சுற்றி இருக்கும் காலி இடம் ஆகியவற்றிலும், நகர்ப்புறம் என்றால் சிறு தொட்டிகளிலும், மாடியிலும் அமைக்கலாம்.

விதை வாங்க

அரசு விதைப்பண்ணைகளிலும், வேளாண்மை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் அல்லது பண்ணை மற்றும் ஆராய்ச்சி மையங்களில் தரமான விதைகளை வாங்கலாம்.

தற்போது சில விதை உற்பத்தி நிறுவனங்கள் வீட்டு தோட்ட விதை பெட்டிகள் என்ற பெயரில் பல்வேறு விதைகள் கொண்ட சிறு பெட்டிகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றன.

சாகுபடி

கீரை விதை, பாகல், பூசணி, வெண்டை, சீனிஅவரை, முள்ளங்கி போன்றவற்றை விதைப்பது முறையாகும். கத்தரி, மிளகாய், தக்காளி ஆகியவற்றை நடுவது சிறந்தது.

இடத்தை தயார் செய்தல்

தேர்வு செய்த இடத்தின் மண்ணை கொத்தி எடுத்து மிருதுவாக்க வேண்டும். கல், கட்டிகள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும். மட்கிய எரு உரம் இட்டு நன்றாக கிளறி சிறுசிறு பாத்திகளாக அமைக்க வேண்டும்.

எந்த செடிகளை நட வேண்டும்

தேர்வு செய்த மண்ணுக்கும், பட்டத்துக்கும் ஏற்ற காய்கறிகளை தேர்வு செய்ய வேண்டும். காய்கறி வகைகளில் முள்ளங்கி, கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய், சீனிஅவரை ஆகியவற்றையும், கீரை வகைகளில் முருங்கை கீரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, பந்தல் காய்கறிகளில் அவரை, பாகல், புடலை மற்றும் தரையில் படரும் பூசணி ஆகியவற்றை பயிரிட தேர்வு செய்யலாம்.

விதைக்க

வெண்டையை மண்ணுடன் தொழுஉரம் அல்லது நன்கு மட்கிய உரமிட்டு மண்ணும், உரமும் நன்றாக சேரும் வகையில் புரட்டி போட்டு 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 30 செமீட்டர் இடைவெளியில் 2 விதைகளாக ஊன்ற வேண்டும்.

கொத்தவரையை 45 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைத்து 15 சென்டி மீட்டர் இடைவெளியில் ஊன்றலாம்.

முள்ளங்கிக்கு இறுக்கமான மண் ஏற்றதல்ல. பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளி விட்டு குத்துக்கு 4 விதைகளை ஒன்றே கால் சென்டிமீட்டர் ஆழத்தில் விதைக்க வேண்டும்.

பந்தல் காய்கறிகளான அவரை, பாகல்,புடலை, பீர்க்கங்காய் போன்றவற்றை இருபந்தலாக நடலாம். சாம்பல் பூசணி, சர்க்கரை பூசணி விதைகளை 45 சென்டிமீட்டர் நீள, அகல ஆழமுள்ள குழி தயாரித்து அந்த குழியில் தொழுஉரம் இடுதல் வேண்டும். ஒரு குழிக்கு 7 விதை வீதம் விதைக்க வேண்டும். முளைத்த உடன் நல்ல நாற்றுக்களை வைத்துக் கொண்டு மற்றவற்றை கலைத்து விட வேண்டும்.   

கறி வேப்பிலை

வீட்டுத் தோட்டத்தில் கட்டாயம் ஒரு கறி வேப்பிலை மரத்தை நடுவது நல்லது. கறிவேப்பிலையை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் புரதம், கொழுப்புசத்து, மாவு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்களும் கிடைக்கின்றன.

கீரைவகைகளை சிறுசிறு பாத்திகளாக பிரித்து அதில் கீரைவிதைகளை நட்டு நீர்பாய்ச்சி நட்ட 30 வது நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.

இயற்கை உரம் இடுதல்

வீட்டிற்கு தேவையான காய்கறிகளுக்கு ரசாயன உரம் தேவையில்லை. கிராமபுறங்களில் எளிதாக கிடைக்கும் மாட்டு சாணம், ஆட்டுச்சாணம், இலை தழைகளை எடுத்து இயற்கை உரம் தயாரிக்கலாம்.

இவற்றை எடுத்து சிறு குழி தோண்டி அதில் இட வேண்டும். பின்னர் சாணக்கரைசல் ஊற்றி மண்ணில் மூடி 50 நாட்களுக்கு பின் நன்கு மட்கிய உரமாக பயன்படுத்தலாம். சிறிதளவு உரத்தை செடியின் அடியில் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு

உரமிடும் போது வேப்பம் பிண்ணாக்கு சேர்த்து இடவேண்டும். இலைஉண்ணும் புழுக்கள், பூச்சிகள், சாறுஉறிஞ்சு பூச்சிகளை அழிக்க வேப்ப எண்ணெய் கரைசல் முதலியவை தயாரித்து தெளிக்க வேண்டும்.

பூஞ்சாண நோய்களுக்கு வேப்ப விதை கரைசலும், வேப்பம் பிண்ணாக்கு இடித்த பொடியை பயன்படுத்தலாம். இவற்றை செடியின் அடியில் இட்டு மண்ணால் மூடி நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

அறுவடை

கத்தரி மூன்றாவது மாதம் முதலும், தக்காளி நட்ட 60 வது நாளில் இருந்தும் பழம் பறிக்கலாம். மிளகாய் 70 வது நாளில் இருந்தும், முள்ளங்கி 45 வது நாளில் இருந்தும் பறிக்கலாம்.