நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் இருந்து பயிரைப் பாதுகாப்பது எப்படி?

How to protect the crop from pests pods
how to-protect-the-crop-from-pests-pods


சிவப்புக் கம்பளிப்புழு, படைப்புழு, ஆகியவை நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகளில் முக்கியமானவை.

இந்த பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்கும் நடவடிக்கைகள்:

1.. சிவப்பு கம்பளிப்புழு:

கோடை மழைக்கு முன் வரப்புகளிலும் நிழலான இடங்களிலும் மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவு செய்து வெளிக்கொணர்ந்து சேகரித்து அழிக்கவும்.

மானாவாரிப் பயிர்களில் விதைப்புக்கு பிறகு மழைக்குப்பின் விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும்.

துவரை மற்றும் தட்டைப்பயிர்களை ஊடுபயிர் செய்வதால் இளம்பருவ புழுக்கள் உள்ள கண்ணாடி போன்று தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும்.

அதிக தாக்குதல் உள்ள காலங்களில் தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 செ.மீ. ஆழம் மற்றும் 25 செ.மீ. அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து பரவுவதைத் தடுக்கவும்.

சிவப்புக் கம்பளிப் புழுக்களை கட்டுப்படுத்த குவினால் பாஸ் 2.5 மிலி (அ) குளோர்பைரிபாஸ் 3 மிலி (அ) ட்ரைசோபாஸ் 2 மிலி/லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

என்.பி.வி. நச்சுயிரியை தெளித்தல் ஒரு ஏக்கருக்கு 200 மிலி என்.பி.வி. நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக் கரைசல்) மற்றும் 100 மிலி ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்கவும்.

2.. படைப்புழு அல்லது வெட்டுப்புழு:

ஆமணக்குப் பயிரை நிலக்கடலைப் பயிரைச் சுற்றி வரப்பு பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட்டு பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். அல்லது பொறிப்பயிராக பயன்படுத்தி தாக்குதலைக் குறைக்கவும்.

விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப்பொறிகளை வயலில் பொருத்தி அந்துப்பூச்சி வெளிவருவதை கண்காணிக்கவும்.

முட்டைக் குவியல்களைச் சேகரித்து அழிக்கவும்.

ஆமணக்கு, தட்டைப்பயிர் மற்றும் நிலக்கடலைகளின் கண்ணாடி போன்று தாக்கப்பட்ட இலைகள் தென்பட்டஉடன், இலைகளில் உள்ள புழுக்களைச் சேகரித்து அழிக்கவும்.

படைப் புழுக்களை கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4மி.லி. (அ) புரோபனோபாஸ் 2 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம். அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில் (50 சதம்), நனையும் தூள் 0.5 கிலோ ஆகிய இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச் சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்கவும்.

என்.பி.வி. நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மிலி என்ற அளவில் வெல்லம் (1.0 கிலோ/ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன் (100மிலி/ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios