தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தியை எப்படி செய்வது?
** உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம், குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும். அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.
** தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.
** தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.
** இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.
** இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.
** தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும். 60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
** ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு குறைவே. மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்: பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
** பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.
** இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.