அறுவடைக்குப் பின்னர் வெங்காயத்தை எப்படி பதப்படுத்துவது?
பருவம்:
பொதுவாக இந்தியாவில் மற்ற இடங்களில் காரீப் பருவத்தில் நட்ட வெங்காயம் ஐந்து மாதத்தில் முதிர்ச்சிப் பெற்று நவம்பர் - டிசம்பர் மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
தமிழகத்தில் முன் காரீப் பருவத்தில் நட்ட பயிர், ஜீலை - ஆகஸ்ட் மாதங்களிலும் பின் காரீப் பருவத்தில் நட்ட பயிர் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் அறுவடையாகிறது.
தட்ப வெப்பநிலை:
இப்பருவங்களில் குறைவான வெப்பநிலை நிலவுவதால் தாள்கள் முழுவதுமாக மடிவதில்லை. எனவே காய்கள் முழுப்பெருக்கம் அடைந்தவுடன் காய்கள் சிவப்பாக காணப்படும்.
நீர்ப்பாசனம்:
இந்நிலையில் அறுவடைக்கு 10 - 15 நாள்களுக்கு முன் நீர்ப்பாசனத்தை நிறுத்துவதால் காய்கள் நன்றாக இறுக்கமடையும்.
காய் வெடிப்பு:
காய்கள் நன்றாக முதிர்ச்சியடைந்தவுடன் குறித்த காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் காய்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
பதப்படுத்துதல்:
அறுவடைக்கு பின் காய்களை வரிசையாக தாள்களால் காய்ப்பகுதி மறையும் வண்ணம் வைத்து வயலில் உலர்த்த வேண்டும்.
இவ்வாறு உலர்த்திய பின்னர் தாள்களை 2.5 செ.மீ உயரம் விட்டு அறுத்து எடுத்த பின் நிழலில் ஒருவாரம் உலர்த்த வேண்டும்.
பதப்படுத்தும் போது சேதமுற்ற, அழுகிய, நோய் தாக்கிய காய்களை அகற்றி விட வேண்டும்.
அறுவடை:
ராபி பருவ வெங்காயப் பயிரில் தாள்கள் மடிந்தவுடன் நீர்ப்பாய்ச்சுவதை முழுவதுமாக நிறுத்தி 15 நாட்களுக்குப்பின் அறுவடை செய்யலாம்.
அதிக நீர்ப்பாசனம் வெங்காயத்தின் சேமிப்பு திறனை சீர்கெடச் செய்யும். மண் மிருதுவாக இருந்தால் காலையிலேயே காய்களை அறுவடை செய்யலாம்.
50% தாள்கள் மடிந்து ஒரு வாரத்திற்கு பின்னர் அறுவடை செய்வது சேமிப்பில் குறைவான எடையிழப்பை ஏற்படுத்தியும்.