உள்ளுர் ரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?
மண்புழு உரம்
கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது.
ஆனால், அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது.
இவ்வாறு, அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.
உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?
1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.
2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.
3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.
4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
உள்ளுர் ரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்
உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும்.
எனவே, மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம்.
மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.