நிலக்கடலைக்கு ஏற்ற நிலத்தை எப்படி தயார் செய்யணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...
நிலக்கடலைக்கு ஏற்ற நிலம் தயாரித்தல்
விதை உற்பத்தி செய்வதாகத் தேர்ந்தெடுத்த நிலத்தை நான்கைந்து முறை நன்கு உழவு செய்து கட்டிகளை உடைத்து புழுதிபட தயார் செய்ய வேண்டும். அகல உழுவதைவிட ஆழ உழவு செய்வது சாலச்சிறந்தது.
கடைசி உழவிற்கு முன் ஒரு ஏக்கருக்கு 5 டன் (10 வண்டி) மக்கிய தொழு உரம் இடவேண்டும். நிலத்தை உழுது தயார் செய்த பின்னர் அதை விதைப்பதற்கு ஏற்றவாறு மண்ணின் தன்மை மற்றும் நீர் பிடிப்பு ஆகியவற்றைப் பொருத்து பாத்திகளாகவோ (அல்லது) பார்களாகவோ அமைத்துக் கொள்ளலாம்.
பயிர் இடைவெளி
விதைக்கும் போது விதைக்கு விதை இடைவெளி விட்டு விதைப்பது மிக முக்கியமாகும். விதை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும் (30 செ.மீ), செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு விதைக்க வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கும் கீழே சென்று விடக்கூடாது.
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
நிலக்கடலையில் பயிர் எண்ணிக்கையை சீராகப் பராமரிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். செடி எண்ணிக்கையைப் பராமரிக்க, கீழ்க்காணும் உத்திகளை பின்பற்ற வேண்டும்.
• தேவையான அளவு விதைப்பருப்பைப் பயன்படுத்த வேண்டும்.
• தூய்மையான, நன்கு முற்றிய பருமனான பொருக்கு விதைகளை பயன்படுத்த வேண்டும்.
• விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
• முளைகட்டுதல் முறையினை பின்பற்றிட வேண்டும்.
• நிலத்தைத் தயார் செய்யும்போது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
• விதைப்பில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற நபர்களைக் கொண்டு சரியான இடைவெளி கொடுத்து விதைக்க வேண்டும்.
மேற்கூறிய முறைகளைக் கையாண்டு இடப்படும் உரம் வீணாகாமல் தடுத்து நன்கு பயன்படுத்தி செடிகளின் எண்ணிக்கை குறையாது பராமரித்து அதிக மகசூல் பெறலாம்.