மண்புழு உரம் தயாரிப்பு: இடம் முதல் முதலீடு வரை ஒரு அலசல்...
மண்புழு உரம் தயாரிப்பு
இடம்
இந்த தொழில் ஆரம்பிக்க குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப் புறங்களில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.
மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.
மூலப் பொருட்கள்!
மாட்டுச் சாணம், கோழி இறகு, மீன் கழிவுகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்கும் தன்மையுடைய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு முறை!
மாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், சருகுகள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும்.
இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண் புழு உரம் தயாராகிடும். இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம்.
முதலீடு!
ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க குறைந்த முதலீடே போதுமானது. செயல்பாட்டு மூலதனம், முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் என மொத்தம் சுமார் 62,000 ரூபாய் வரை செலவாகும்.
எந்திரங்கள்!
மிகப்பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு செய்யப்படும் தயாரிப்பு அல்ல இது. பெரும்பாலும் நம் உடலுழைப்பைக் கொண்டே தயார் செய்யக்கூடியது.
எனினும், பெரிய அளவில் செய்யும்போது வேலை சுலபமாக பவர் டிரைவன் சாஃப் கட்டர், எடை போடும் இயந்திரம், தண்ணீர் பாய்ச்சுவதற்கு குழாய் மற்றும் விவசாயம் சார்ந்த சில கருவிகள் இந்த தொழிலுக்குப் போதுமானவை.
இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தாராளமாகக் கிடைக்கிறது.