கோழிகள் அடைக்காத்தலின்போது கரு கூடியுள்ள முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?
அடைக்கோழியின் உடல்நலன்:
பேண், செல் பாதிப்பு இருந்தால் பியூடாக்ஸ் என்ற மருந்தினை 2 மிலி மருந்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கோழிகளின் தலையைத் தவிர மற்ற பாகங்களை மருந்து கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் விடவேண்டும்.
இவ்வாறு செய்வதால் உடலில் பேண், செல் பாதிப்பினால் ஏற்படும் அரிப்பு, நமச்சல் குறைந்து நல்ல நலத்துடன் அடைகோழிகள் அடையில் அமர்ந்து குஞ்சு பொரிக்க முடியும்.
கருக் கூடிய முட்டையைக் கண்டறிதல்:
நாட்டுக்கோழிகளில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பெற 21 நாட்கள் ஆகிறது. நாம் வைத்துள்ள முட்டைகளில் கருக்கூடாமல் கூமுட்டைகளாக எத்தனை உள்ளன என்பதை முட்டை அடை வைத்த 7 நாட்களில் கருமுட்டை பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
இதற்கு தேவையானவை ஒரு டார்ச்லைட் அல்லது மின்சார பல்பு, ஒரு அட்டை.
கருமுட்டையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு இருட்டு அறையில் ஒரு அட்டையில் முட்டைபோகும் அளவிற்கு ஓட்டை போட்ட வேண்டும். முட்டையின் அகலமான பகுதி மேலாகவும் கூம்பு வடிவமான பகுதி கீழாக வரும்படி நெட்டு வசமாக வைக்க வேண்டும்.
கீழ்புறத்தில் இருந்து விளக்கு வெளிச்சம் கொடுக்கும்போது முட்டையில் கருக்கூடியிருந்தால் முட்டையின் மேற்பகுதியில் வளர்ச்சிஅடைந்த கருவின் தலை கரும்புள்ளியாகவும், ரத்தநாளங்கள் சிவப்பாகவும் தெரியும்.
கருக்கூடாத முட்டையில் இவ்வாறு எந்தவிதமான புள்ளிகளோ, ரத்த நாளங்களோ இல்லாமல் வெறுமனே இருக்கும்.
எனவே அடைக்கு வைத்த 7வது நாளில் கருக்கூடிய முட்டையை மட்டும் கண்டறிந்து மீதமுள்ள கருக்கூடாத கூமுட்டையை அடையிலிருந்து எடுத்துவிடலாம்.