தீவிர நெல் சாகுபடி எப்படி செய்யனும்? ஒரு அலசல்…
தீவிர (அ) திருந்திய நெல் சாகுபடி
குறைந்த இடுபொருள் செலவில் அதிக நெல் உற்பத்தி செய்வதன் மூலம் சாகுபடியை ஒரு லாபகரமான வேளாண் தொழிலாக்க முடியும்.
அத்தைகையதொரு தொழில் நுட்பம்தான் “தீவிர நெல் சாகுபடி” என்ற ஒருங்கிணைந்த நெற்பயிர் நிர்வாகம்.
ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகத்தின் அம்சங்கள்
1.. குறைந்த இடுபொருள் செலவில்
2.. 14 நாட்கள் வயதுடைய நாற்றுக்கள்
3.. குத்துக்கு ஒரு நாற்று
4.. அதிக இடைவெளி விட்டு சதுர நடவு முறை (22.5 x 22.5 செ.மீ.)
5.. நஞ்சை நிலத்திற்குரிய சுழல் கூம்பு வடிவ களை எடுக்கும் கருவி (கோனோ வீடர்) மூலம் களைகளை அமுக்கி சேற்றை கலக்கி விடுதல்.
6.. நீர் மறைய நீர் கட்டி நீரின் அளவை குறைத்தல்
7. அங்கக கழிவுகளை உபயோகித்து பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து நிர்வகித்தல்
நாற்றுகள் தயார் செய்தல்
14 நாட்களில் வாளிப்பான நாற்றுகளை பெற திருந்தியமைக்கப்பட்ட பாய் நாற்றங்கால் முறையை பயன்படுத்தப்பட வேண்டும். நாற்றங்காலை வடிகால் வசதியுடன் நீர் ஆதாரத்திற்கு அருகாமையில் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு எக்டர் நடவு செய்யத் தேவையான நாற்றங்கால் பரப்பு 100 சதுர மீட்டர் (2.5 சென்ட்) ஒரு மீட்டர் அகலமும், 100 மீட்டர் வரை நீளமும், 5 செ.மீ. உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்கவும்.
பாத்திகளின் மேல் 300 காஜ் கனமுள்ள வெள்ளை/கருப்பு பாலித்தீன் விரிப்பு அல்லது பழைய பாலித்தீன் உரச்சாக்குகளை (100 ச.மீட்டர்) விரிக்கவும். நீளம் மற்றும் அகல வாக்கில் 4 கட்டங்களாக தடுக்கப்பட்ட 1 மீட்டர் நீளம் 0.5 மீட்டர் அகலம் 4 செ.மீ. உயரம் கொண்ட விதைப்புச்சட்டம் தயார் செய்து அதனை விரிப்புக்கு மேல் சரியாக வைக்க வேண்டும்.
1 கிலோ வளமான வயல் மண்ணுடன் 0.5 கிராம் பொடியாக்கிய டி.ஏ.பி. உரத்தைச் சேர்த்து விதைப்புச் சட்டத்துக்குள் முக்கால் அளவிற்கு நிரப்பவும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட 5 கிலோ முளைக்கட்டிய விதையை ( எக்டர் நடவு செய்ய) 0.5 சதுர மீட்டர் சட்டத்துக்கு 45 கிராம் அளவில் விதைத்து பின் மண்ணால் நன்கு மூடிவிடவேண்டும்.
பூவாளியால் அடி வரை நனையும் அளவில் தண்ணீர் தெளித்து விதைப்புச் சட்டத்தை வெளியில் எடுக்கும். 5 நாட்கள் வரை பூவாளியில் தண்ணீர் தெளித்து பின் பாத்தி நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்டவும்.
விதைத்த 9ம் நாள் 0.5 சதம் யூரியா கரைசலை (150 கிராம் யூரியா 30 லிட்டர் தண்ணீர்) பூவாளி மூலம் மாலையில் தெளிக்கவும்.
14-ஆம் நாள் சிறிய கட்டத்தில் உள்ள 12 முதல் 16 செ.மீ. உயரமுள்ள நாற்றுக்களை மெதுவாக அசைத்து பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு போகலாம். அங்கு ஒற்றை நாற்றுக்களை வேர் அறுபடாமல் எளிதில் பிரித்து நடவு செய்யலாம்.
நடவு செய்தல்
குறுவை மற்றும் சம்பா பருவத்தில் எக்டருக்கு 12.5 டன் மக்கிய குப்பை அல்லது தொழு உரத்தை இட்டு நன்கு உழவு செய்யவும். பின் நிலத்தை நன்கு சமன் செய்யவும்.
பரிந்துரைக்கப்படும் முழு அளவு மணி சத்துடன் பாதி அளவு. சாம்பல் சத்தை அடியுரமாக கடைசி உழவின் போது இடவும். இத்துடன் 25 கிலோ சிங்சல்பேட் இடவும். தழைச்சத்து அடியுரமாக இடத் தேவையில்லை.
நடவு இடைவெளி
14 நாள் வயதுடைய நாற்றுக்களை குத்துக்கு ஒரு நாற்றாக வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 22.5 செ.மீ. (சதுர மீட்டருக்கு 20 குத்துக்கள்) இடைவெளியில் சதுர முறையில் நடவு செய்யவேண்டும்.
கோனோ வீடர் கருவி மூலம் களைக் கட்டுப்பாடு
நடவு செய்த 15ம் நாள் முதல் 3 அல்லது 4 முறை கோனோ வீடர் கருவி மூலம் வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி உள்ள இடைவெளியில் இடை உழவு செய்து களைகளை சேற்றில் அமுக்கிவிடவேண்டும்.
கருவியில் மாட்டாத களைகளை கையால் எடுத்து விடலாம். இக்கருவி மூலம் ஒரு எக்டர் வயலில் இருபுறம் இயக்க 6-8 கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.
மேலுரமிடல்
நட்ட 15-ம் நாள் கோனோ வீடர் மூலம் இடை உழவு செய்த பின் முதல் மேலுரமாக தழைச்சத்து இடலாம். பின்னர் ஒவ்வொரு வாரமும் பச்சை வண்ண அட்டை எண் 4-க்கு குறைவாக இருக்கும்போது எக்டருக்கு குறுவையில் 35 கிலோ, தாளடியில் 30 கிலோ என்ற அளவில் தழைச்சத்து இடும் போது பாதி அளவு சாம்பல் சத்தையும் சேர்த்து இடலாம்.
கோனோ வீடர் இடை உழவு செய்தால் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு, நுண்ணுயிர் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரிக்கிறது. உரப்பயன்பாடு கூடுகிறது. வேரின் வளர்ச்சி மிகுந்த தூர்கட்டும் திறன் கூடுகிறது.
ஒரு குத்தில் அதிக பட்சமாக 35-40 கதிர் உள்ள தூர்களும் சராசரியாக 28 கதிர் உள்ள தூர்களும் கிடைக்க வழி உள்ளது. வாளிப்பான நீண்ட கதிர்கள் மற்றும் கதிரில் அதிக மணிகளின் எண்ணிக்கை கிடைக்க வழி வகுக்கிறது.
இடுபொருள் சிக்கனம்
பச்சை வண்ண அட்டை மூலம் தழைச்சத்து இடுவதால் எக்டருக்கு 15 முதல் 45 கிலோ வரை தழைச்சத்தை மிச்சப்படுத்தலாம்.
திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
1.. குறைந்த விதையளவு
2.. குறைந்த நீர் தேவை
3.. நாற்று விடுவதற்கு குறைந்த இடம் போதுமானது
4.. வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு
5.. குறைந்த இடுபொருள் செலவு
6.. அதிகமான மகசூல்