எளிமையான இயற்கை முறையில் தினை சாகுபடி செய்வது எப்படி?
தினை சிறு தானிய வகைகளில் மிக முக்கியமானது. சிறு தானியங்களின் அரசி என்று அழைக்கப்படுகிறது தினை. சங்க கால இலக்கியங்களில் தேன், தினைமாவு பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
தினை விதைப்பு (பயிர்) செய்ய கார்த்திகை ,தை மற்றும் சித்திரை பட்டங்கள் சிறந்தவை. ஆடி பட்டத்தில் விதைத்தால் மழையால் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
கோவை வேளாண் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட ரகம் சிறந்தது. அடி உரமாக பத்து டன்கள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மூன்றாவது சால் உழும் போது ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ தினை விதைகளை தூவி சமன் படுத்த வேண்டும்.
மணலில் கலந்து விதைக்க வேண்டும். நாற்று முறையிலும் நடவு செய்யலாம். ஆனால் தெளிப்பு முறையே சிறந்தது.
தினை விதைப்பு செய்த ஐந்தாம் நாள் முளைப்பு நன்கு தெரியும். இருபதாவது நாள் தேவைப்பட்டால் ஒரு களை. பாரம்பரிய ரகத்தில் நோய் தாக்கம் மிக குறைவு.
மானாவாரி பயிராக இருந்தால் கற்பூரகரைசல் ஒரு முறை தெளித்தால் போதுமானது. பூச்சி தாக்குதல்கள் அனைத்தும் கட்டுப்படும். உரமாக மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இரண்டு முறை தெளித்தால் போதுமானது.
நீர் பாசன முறையாக இருந்தால் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சும் போது பாசன நீரில் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் தொடர்ந்து கலந்து விட வேண்டும்.
தொன்னூறாவது நாள் அறுவடை செய்யலாம். பறவைகள் தொந்தரவு சிறிதளவு இருக்கும். ஏக்கருக்கு ஆறு மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும்.
தினைமாவு மிகுந்த கால்சியம் மற்றும் இரும்பு சத்து உடையது. தொடர்ந்து நாற்பது நாள் சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் மிகுந்த உடல் வலிமை கிடைக்கும்.