கால்நடைக் கோழித் தீவனமான அசோலாவை எப்படி உருவாக்குவது?
சமீப காலமாக அசோலா ஒரு உன்னத கால்நடை கோழித் தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 25-30 சதம் புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், பீட்டா கெரோட்டின் ஆகிய சத்துக்கள் உள்ளன.
பீட்டாகெரோட்டின் நிறமி வைட்டமின் “ஏ’ உருவாவதற்கு மூலப்பொருளாகும்.
இச்சத்து உள்ளதால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உட்கொள்வதால் கண் பார்வைக்கு உகந்தது.
அசோலா:
தழைச்சத்தை நிலைநிறுத்தும் நீலப்பச்சைப் பாசியைக் கூட்டு வாழ்முறை நிலையில் கொண்டுள்ளது.
இந்த பெரணி – பாசி கூட்டமைப்பில் உள்ள இரண்டும் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்களாகும்.
நீலப் பச்சைப்பாசி காற்று மண்டலத்தில்இருக்கும் தழைச்சத்தையும் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
அசோலா பெரணி அனபினை அசோலா என்ற பாசியை தன் இலையில் வைத்துக்கொண்டு அதற்கு பாதுகாப்பும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கிறது. இதற்கு மாற்றாக பெரணி பாசியிடமிருந்து நிலைநிறுத்தப்பட்ட தழைச்சத்தையும் வளர்ச்சிக்கு உதவும் பொருட்களையும் எடுத்துக்கொள்கிறது.
அசோலாவை தீவனமாகப் பயன்படுத்துவதால் நாள் ஒன்றுக்கு ஒரு கோழிக்கு அடர்தீவனம் செலவில் 20 பைசா சேமிக்கலாம்.
அசோலாவை கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பதால் பால் உற்பத்தி 15-20 சதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.
பாலின் கொழுப்புச் சத்து 10 சதம் வரை உயருகிறது.
கொழுப்புச்சத்து இல்லாத திடப் பொருளின் (எஸ்என்எப்) அளவு 3 சதம் வரை கூடுகிறது.
அசோலா இடப்பட்ட கோழியின் முட்டையின் எடை ஆல்புமின் குளோபுலின கரோட்டின் அளவு அடர்தீவனம் மட்டும் இடப்பட்ட கோழியின் முட்டையின் அளவைவிட அதிகமாக உள்ளது.
அசோலாவை உற்பத்தி செய்யும் முறை:
நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் ஷீட்டை சீராக விரிக்க வேண்டும். இதன்மேல் 2 செ.மீ. அளவிற்கு தண்ணீர் ஊற்றியும் பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். பின்னர் இப்பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணின் சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கச் செய்கிறது.
15 நாட்களில் ஒரு பாத்தியில் (10 x 2 x 1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகிறது. மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டுவிட்டு எஞ்சிய இரண்டாவது பகுதியை அறுவடை செய்யலாம்.
10 நாட்களுக்கு ஒர முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. அசோலாவை அறுவடை செய்து கால்நடை கோழிகளுக்கு சத்து நிறைந்த, சுவை மிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம்.