கோழிக் குஞ்சு பொரிப்பகத்தை எப்படி கட்டுவது? முழுத் தகவலும் இங்கே...
குஞ்சு பொரிப்பகத்தைக் கட்டுதல்
குஞ்சு பொரிப்பகத்தை கவனமாக வடிவமைத்து, முறையாக கட்டி, போதுமான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாவன:
குஞ்சு பொரிப்பகத்தின் அகலம்:அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பான் இருக்கும் அறைகளின் அகலம் குஞ்சு பொரிப்பானின் வகையினைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. குஞ்சு பொரிப்பானின் அகலத்தைக் கணக்கிட்டு பிறகு அதனுடன் அருகில் வேலை செய்ய இடம், இயந்திரங்களுக்கும் சுவற்றுக்கும் இடையில் இடைவெளி, போன்றவற்றுக்காக இடத்தை ஒதுக்கி குஞ்சு பொரிப்பகத்தின் அகலத்தை முடிவு செய்யவேண்டும்.
கூரையின் உயரம்:
கூரை 10 அடி உயரத்தில் அமைக்கப்படவேண்டும்.
சுவர்கள்:
குஞ்சு பொரிப்பகத்தின் சுவர்கள் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்படவேண்டும். மேலும் இச்சுவர்கள் பூஞ்சான்களின் வளர்ச்சியை ஊக்குவிக்காத வண்ணமும் இருக்கவேண்டும்.
கூரை அமைக்கப் பயன்படும் பொருட்கள்:
பெரும்பாலான குஞ்சுப் பொரிப்பகங்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். குளிரான தட்பவெப்ப நிலையில் கூரையில் தண்ணீர் கசிவது பொதுவாக இருக்கும். எனவே கூரை அமைக்கப் பயன்படும் பொருள் தண்ணீரை உறிஞ்சாதவாறு இருக்கவேண்டும்.
கதவுகள்:
குஞ்சு பொரிப்பகத்தின் கதவுகள் அகலமாக இருந்தால் தள்ளு வண்டிகள், குஞ்சுகளை எடுத்துச் செல்லும் பெட்டிகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். கதவு நான்கு அடி உயரமும், நான்கு அடி அகலமும்,இரண்டு புறமும் திறக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.
தரை:
குஞ்சுப் பொரிப்பகத்திலுள்ள அனைத்து தரைப்பகுதிகளும் காங்கிரீட்டினால் ஆனதாக இருக்கவேண்டும். சிமெண்ட் காங்கிரீட்டுக்கு இடையில் இரும்பு கம்பிகள் வைத்து தரையினை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அமைப்பதால் தரை விரிசல் விடாமல் இருக்கும். எல்லா காங்கிரீட் தரைகளும் வழவழப்பாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். காங்கிரீட் தரையின் சாய்வு 10 அடிக்கு 0.5 இஞ்ச்க்கு மேல் இருக்கக்கூடாது.