சாண எரிவாயு தயாரிக்கும்போது இடம் மற்றும் தண்ணீர் எவ்வளவு தேவை?
இட தேவை
காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கவும், வெளியே வரும் கழிவை நிரப்புவதற்கான குழிகள் வெட்டவும் போதுமான இடம் வேண்டும். தொழுவத்திற்கு மிக அருகிலும், மற்றொரு புறம் காஸ் உபயோகமாகும் இடத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக, சாணத்தை நீண்ட தூரம் கொண்டுவருவது விவேகமாகாது. சாதாரணமாக இந்த தூரம் 20 மீட்டருக்கு மேல் போகாமல் இருப்பது நல்லது.
காஸ் இயந்திரம் வெடிக்கும் அபாயம் எதுவும் இல்லை என்பதும், துர்நாற்றம் வீசும் அல்லது ஈ பரவும் பிரச்சனை எதுவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். ஆகையால் வீட்டுக்கு அருகில் காஸ் இயந்திரத்தை நிறுவுவதற்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, வெளியேவரும் கழிவைக் கம்போஸ்ட் உரமாக்குவதற்குப் பல குழிகள் தோண்டுவதற்கு போதுமான இடம் காஸ் இயந்திரத்தின் அருகில் இருக்கவேண்டும்.
ஆனாலும் ஒரு கிணற்றுக்கு 15 மீட்டர் தூரத்திற்குள் காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கக்கூடாது. ஏனெனில், சில சந்தர்ப்பங்களில், சாணம் அல்லது மலத்தின் கலங்கல் ஊறி கிணற்றில் கலக்கும் அபாயம் இருக்கிறது.
தண்ணீர்
போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டும். சாதாரணமாக காஸ் இயந்திரத்தில் ஊற்றப்படுவதற்கு முன்னர் சாணம் சம அளவு தண்ணீரில் கலக்கப்படுகிறது. ஆகவே, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் காஸ் இயந்திரத்தைப் பற்றி நினைத்துக் கூடப்பார்க்க முடியாதென்பது இயற்கையே.