விதைகளை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? விவசாயிகளுக்கு சில வழிமுறைகள்…
விதையே பெரும் விருட்சம் ஆகிறது. விதையின் ஆரோக்கியமே விவசாயத்துக்கு அடிப்படை. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்று விவசாயிகள் அறிந்து கொள்வது நன்று.
விதை மற்றும் தானிய மணிகளைத் தாக்கும் பூச்சிகள் பெரும்பாலும் வண்டுகள் மற்றும் புழுக்கள் இனத்தைச் சேர்ந்தவைதான். இவைகளை முறையான வழிகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம். சுமார் 40 வகையான பூச்சிகள் தாக்குவதால், விதைகள் 5 சதம் வரை குறைகின்றன.
தானியம் மற்றும் விதைகளை தாக்கும் பூச்சிகள், முதலில் உள்பகுதியைக் குடைந்து சத்துப் பகுதி முழுவதையும் உண்டுவிடும். பிறகு வெற்று ஓட்டையை மட்டும் விட்டுச் செல்கின்றன. இந்த வகை தானியங்களால், அதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க முடியாது.
** விதைகளை சேமிக்க, புதிய கோணிப்பைகளையே பயன்படுத்த வேண்டும்.
** சேமிப்பு கிடங்குகளையும், சேமித்து வைக்கும் அறைகளையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அதாவது, உடைந்த பொடியான தானியங்கள், குப்பைகள், தூசு போன்றவற்றை அகற்றி எரித்துவிட வேண்டும்.
** விதைகள் மற்றும் தானியங்கள் சேமிக்கும் அறைகளை வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்ப எண்ணெய் கரைசல் போன்றவற்றை கொண்டு மொழுக வேண்டும்.
** மூங்கில் கூடைகளின் மீது வேப்பம் புண்ணாக்கு கரைசலை கெட்டியாக பசைப் போல் தயாரித்து பூச வேண்டும்.
** சேமிக்கும் தானியங்களின் ஈரப்பதம் 14 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
** சேமிக்கும் விதைகளின் ஈரப்பதம் 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
** 100 கிலோ நெல் விதைகளை சேமிக்க ஒரு கிலோ வேப்பம் கொட்டை பருப்பு தூள் அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் அல்லது ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை கலந்து சேமிக்கலாம்.
** நூறு கிலோ அரிசியை சேமிக்க 12 கிலோ வேப்பம் இலைத்தூள், ஒரு கிலோ வேப்பம் கொட்டை தூள் (அ) ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் மற்றும் செம்மண், 50 கிராம் போரிக் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தி சேகரிக்கலாம்.
** கோதுமை 100 கிலோ சேமிக்க 5 கிலோ வசம்பு கிழங்கு தூள் பயன்படுத்த வேண்டும்.
** 100 கிலோ மணிலா விதைகளை சேமிக்க 5 கிலோ மஞ்சள் கிழங்கு தூள் கலந்து வைக்க வேண்டும்.
** காய்கறி விதைகளை சேமிக்க துணிப்பைகளையே பயன்படுத்த வேண்டும். ஈரப்பதம் 7 முதல் 8 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
** நீண்டகால சேமிப்புக்கு பாலித்தீன் பைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் ஈரப்பதம் 6 சதவீதம் உள்ளவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
** காய்கறி விதைகளை பசுஞ்சாணத்தில் தோய்த்து பின் உலர வைத்து சேமிக்கலாம்.
** நூறு கிலோ உளுந்து, பச்சை பயறு போன்ற பயறு வகைகளை சேமிக்க ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் மற்றும் செம்மண் (அ) 7 கிலோ துளசி இலைத்தூள் அல்லது ஒரு லிட்டர் வேப்ப எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி சேமிக்கலாம்
இந்த முறைகளைப் பயன்படுத்தி விதைகளை பாதுகாத்து சேமிப்பதன் அவை நீண்டநாள் இருந்து என்றும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.